மூன்றாம் தரப்பு தகவல் தொழில்நுட்ப விற்பனையாளரான ‘ஈஸிநெட்டிக்’கின் (Ezynetic) கட்டமைப்புக்குள் ஊடுருவிகள் நுழைந்ததை அடுத்து, உரிமம்பெற்ற 12 கடன் வழங்குநர்களிடமிருந்து வட்டிக்கு கடன் வாங்கிய ஏறக்குறைய 128,000 பேரின் தரவு திருடப்பட்டது.
கடன் பெற்றவர்களின் ‘தனிப்பட்ட அடையாளத் தகவல்’ திருடப்பட்டதாக சட்ட அமைச்சு வியாழக்கிழமை (ஜூலை 25) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
கடன் கொடுத்தவர்கள் இந்த அத்துமீறல் குறித்து கடன் வாங்கியவர்களுக்கு தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறிய அமைச்சு, மின் தூண்டில் (phishing) மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டியது.
காவல்துறை, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையத்திடம் ‘ஈஸிநெட்டிக்’கும் கடன் வழங்குநர்களும் இந்த அத்துமீறல் குறித்து புகார் அளித்துள்ளன.
‘ஈஸிநெட்டிக்’கின் சேவைகளை மொத்தம் 20 நிறுவனங்கள் பயன்படுத்தின. ஆனால் அவற்றில் எட்டு நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என சட்ட அமைச்சு கூறியது.
அந்த மூன்றாம் தரப்புக் கட்டமைப்பு, அரசாங்கக் கட்டமைப்புடன் தொடர்புடையதன்று எனவும் அது சொன்னது.
மேலும், அத்துமீறல்களைத் தவிர்க்க, ஈஸிநெட்டிக் சேவைகளைப் பயன்படுத்தும் 20 நிறுவனங்களும் வட்டித்தொழிலர்கள் கடன் தகுதிக் கண்காணிப்புப் பிரிவுத் தளத்தை அணுகுவதற்கு சிங்கப்பூர் வர்த்தகக் கடன் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
தரவுக்கசிவைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய சட்ட அமைச்சு, தங்கள் வசம் அல்லது கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு நபரின் தனிப்பட்ட தகவலையும் பாதுகாக்க, உரிமம்பெற்ற கடன் வழங்குநர்களுக்கு கடமை உள்ளதாக வலியுறுத்தியது.

