சிங்கப்பூரில் செயற்கைக் கருத்தரிப்புக்கு கருமுட்டைகளைச் சேர்க்க தம்பதிகள் முடிவு செய்யும் முன்னர் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகளில் மரபணு சார்ந்த 13 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
சுகாதார அமைச்சு அவற்றுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
மரபணு சார்ந்த உடல்நிலை நிலவரச் சோதனையில் சேர்க்கப்பட்டுள்ள 13 அம்சங்களில் ஆறு அம்சங்கள் ஒற்றை மரபணுக் குறைபாடு தொடர்புடையன.
அந்தக் குறைபாடு மார்பகப் புற்றுநோய்க்கும் எளிதில் உடையக்கூடிய அளவுக்கு எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் நோய்க்கும் இட்டுச் செல்லும்.
எஞ்சிய ஏழு அம்சங்களும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை. மேலும், கருமுட்டைகளை செயற்கைக் கருத்தரிப்புக்குப் பொருத்தமற்றவையாக ஆக்கக்கூடியவை அவை.
இதுபோன்ற கடுமையான நிலவரங்களை, கருமுட்டைகளை செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையில் சேர்க்குமுன்னர் நடத்தப்படும் பிஜிடி (PGT) சோதித்துப் பார்க்க அனுமதி வழங்குவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
இந்த 13 கூடுதல் சோதனை அம்சங்களும் அக்டோபர் 31ஆம் தேதி செயற்கைக் கருத்தரிப்பு நடைமுறையில் சேர்க்கப்பட்டதை அமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
இவற்றையும் சேர்த்து மொத்தம் 169 சோதனை அம்சங்களுக்கு அமைச்சு அனுமதி வழங்கி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னர் ஹண்டிங்டன் நோய், முதுகெலும்பு தசைச் சிதைவு, இரத்த சோகை, ஹீமோபிலியா ஏ மற்றும் பி போன்றவை தொடர்பான சோதனை நிலவரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
கருமுட்டை பொருத்துதலுக்கு முந்திய சோதனையின்போது தற்போது சேர்க்கப்பட்டுள்ள புதிய உடல்நல நிலவரங்களைச் சோதிப்பதற்குத் தேவையான நிதி உதவி, தகுதியுள்ள தம்பதியினருக்குக் கிடைக்கும் என்றும் பேச்சாளர் கூறினார்.
கருத்தரித்தபோதிலும் பிறக்க இருக்கும் குழந்தைக்கு பரம்பரை நோய்கள் ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்கள் அதற்குத் தகுதிபெறுவர் என்றார் அவர்.

