சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 38,146 வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 12.8 விழுக்காடு அதிகமாகும்.
இருப்பினும், இதே காலகட்டத்தில் புதிதாக 49,305 வணிகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் கிட்டத்தட்ட 7,300 நிறுவனங்கள் தகவல் தொடர்புத் துறையைச் சார்ந்தவை.
இத்தகவலைக் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டது.
கட்டுமானம் தொடர்புடைய நிறுவனங்கள் அதிகமாக மூடப்பட்டன. ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 2,127 கட்டுமான நிறுவனங்கள் மூடப்பட்டன. அதேவேளையில், இத்துறையில் 2,277 புதிய நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
சிங்கப்பூர் பொருளியலில் சிறப்பாகச் செயல்படும் துறைகளில் ஒன்றாகக் கட்டுமானத் துறை உள்ளது.
2026ஆம் ஆண்டில் 53 பில்லியன் வெள்ளி வரையிலான பொது, தனியார்க் குத்தகைகள் வழங்கப்படும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் எதிர்பார்க்கிறது.
“அதிக வேலை வாய்ப்புகள் இருந்தபோதிலும், ஈரான் போரால் சிறிய ஒப்பந்ததாரர்கள் கூடுதல் செலவுகளால் சிரமப்படுகின்றனர். மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் தரும் கடுமையான போட்டியாலும் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன,” என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் உணவு பானங்கள் துறை இரண்டாவது இடத்தில் உள்ளது. அதில் மட்டும் 2,101 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், 2,594 புதிய உணவு பான வணிகங்கள் பதிவு செய்யப்பட்டன.
“பொதுவாகச் சிங்கப்பூரில் உணவு பானத் தொழிலைத் தொடங்குவது மிகவும் எளிது. இருப்பினும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அத்துறையில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கும்,” என்று கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.
அதிகரித்து வரும் வாடகை சில உணவு நிறுவனங்களுக்கு நெருக்கடி தருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கடைகளில் அதிகப் பதிவுகள் இருந்தாலும், ஒரு வாடிக்கையாளரின் சராசரி செலவு குறைந்து வருவதும் வருமான இழப்புகளை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.


