ரகசியக் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 ஆடவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் 23 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கடந்த வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் சிக்கினர். குற்றப் புலனாய்வுத் துறையின் ரகசியக் குண்டர் கும்பலுக்கு எதிரான பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்தச் சோதனையை நடத்தியதாகக் காவல்துறை சனிக்கிழமை (மே 31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
தீவு முழுவதும் உள்ள 40 பொழுதுபோக்குக் கூடங்களில் சோதனை நடத்தி, ஏறக்குறைய 90 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அந்த 13 பேரும் கைது செய்யப்பட்டனர். இரவுநேர விடுதிகள், கடைகளிலும் உணவு, பானக் கடைகளிலும் சோதனை நீடித்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடக்கிறது
ரகசியக் குண்டர் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருப்போருக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறியது.
ரகசியக் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறும் அதுபோன்ற நடவடிக்கைகளைக் காவல்துறையிடம் தெரிவிக்குமாறும் பொதுமக்களைக் காவல்துறைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சட்டவிரோதக் கும்பலில் இடம்பெற்றதாகக் கைது செய்யப்படுவோரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மூன்றாண்டு வரையிலான சிறைத் தண்டனை, $10,000 வரையிலான அபராதம் அல்லது அவை இரண்டும் விதிக்கப்படலாம்.

