தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத வேலை: 13 பணிப்பெண்கள் உட்பட 27 பேர் கைது

2 mins read
0fdcbdae-d579-40ea-9379-2635e24d89f5
தீவு முழுவதும் 17 முகவரிகளில் மனிதவள அமைச்சின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 27 பேரும் சிக்கினார்கள். - படம்: மனிதவள அமைச்சு

சட்டவிரோத வேலை மற்றும் வேலை அனுமதிக்கான விண்ணப்பத்தில் பொய்யுரைத்த குற்றங்களுக்காக 27 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 13 பேர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள். எஞ்சிய 14 பேரும் அவர்களின் முதலாளிகள்.

சிங்கப்பூர் முழுவதும் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) 17 முகவரிகளில் மனிதவள அமைச்சின் அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் அவர்கள் சிக்கினார்கள்.

கைதான 27 பேரில் 13 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களும் வேலை செய்வதற்கான முறையான அனுமதியின்றி வேறு வீடுகளில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

முதலாளியின் வீட்டில் தங்கியிராமல் வெளியே தங்கியதன் மூலம் வேலை அனுமதிச்சீட்டு நிபந்தனைகளை அவர்கள் மீறியதாகக் கூறப்பட்டது.

அந்த 13 இல்லப் பணிப்பெண்களின் சட்டவிரோத வேலைக்குத் துணைபுரிந்ததாக இதர 14 பேர் மீதும் சந்தேகிக்கப்படுகிறது.

வேலை அனுமதிச்சீட்டுக்கு விண்ணப்பித்து வரவழைக்கப்பட்டவர்களை வேறு இடங்களில் வேலை தேட வெளியில் விட்ட குற்றத்தை அவர்கள் செய்ததாகவும் அதன் மூலம் வேலை அனுமதிச் சீட்டுக்கான விண்ணப்பத்தில் அவர்கள் அளித்த உறுதிமொழி பொய்யாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த 27 பேர் தொடர்பான விசாரணை நீடிக்கிறது.

சிங்கப்பூர் வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ், எல்லா வேலை அனுமதிச் சீட்டு விண்ணப்பங்களும் மிகச் சரியான விவரங்களுடன் அதற்கான அதிகாரியிடம் முழுமையான, உண்மையான உறுதிமொழிகளை அளிக்க வேண்டியது கட்டாயம்.

வீட்டு வேலைக்கு முறையான வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும்.

வேலை அனுமதிச்சீட்டு இல்லாமல் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு $20,000 வரையிலான அபராதம், ஈராண்டு சிறைத் தண்டனை ஆகியன விதிக்கப்படலாம்.

மேலும், அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்படலாம்.

அதேபோல, வேலை அனுமதிச்சீட்டு விண்ணப்பங்களில் உண்மைக்கு மாறான உறுதிமொழிகளை அளிக்கும் முதலாளிகளுக்கு $20,000 வரை அபராதம், ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

அத்துடன், வேலை அனுமதிச்சீட்டை விண்ணப்பிக்கும் தகுதி அவர்களிடமிருந்து பறிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்