அனுமதியின்றி சிங்கப்பூரில் கூடுதல் காலம் தங்கிய 13 இந்திய நாட்டவர்கள் கைது

அனுமதியின்றி சிங்கப்பூரில் கூடுதல் காலம் தங்கிய 13 இந்திய நாட்டவர்கள் கைது

2 mins read
அவர்களுக்கு வசிப்பிடம் கொடுத்த இந்திய நாட்டவரும் கைது
d9e6f222-1fe3-4ff9-b257-b4d26503b2b6
ஹவ்காங்கில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கைதானவர்கள் அனைவரும் இந்திய நாட்டவர்கள். - படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் 

ஹவ்காங்கில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில், குடிநுழைவுச் சட்டத்தை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் 13 பேரும் அவர்களுக்கு வசிப்பிடம் கொடுத்ததாக ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கைதுசெய்யப்பட்டவர்களில் 13 பேர் இந்திய நாட்டவர்கள் என்று தெரிவித்தது. 19 முதல் 44 வயதுக்குட்பட்ட அந்த 11 ஆடவர்களும் இரண்டு பெண்களும் தங்களது வருகை அனுமதிக் காலம் முடிந்த பின்னரும் சிங்கப்பூரில் தங்கியிருந்தது தெரியவந்தது.

அவர்களுக்குத் தங்குமிடம் கொடுத்ததாக 26 வயது இந்திய நாட்டவரும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தண்டனை குறித்து எச்சரிக்கை

சிங்கப்பூர் சட்டப்படி, அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்தும் இங்கு தங்கியிருப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, குறைந்தது மூன்று பிரம்படிகள் அல்லது $6,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தண்டனைக்காலம் முடிந்த பிறகு அல்லது அபராதம் செலுத்திய பிறகு அத்தகைய நபர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவர். அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு வர தடை விதிக்கப்படும்.

தங்குமிட வசதி வழங்குவோர்க்கு எச்சரிக்கை

குடிநுழைவுச் சட்டத்தை மீறுபவர்களுக்குத் தெரிந்தே வசிப்பிடம் தருவோருக்கு ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனையும் $6,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

கவனக்குறைவாக இடமளிப்பவர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறை அல்லது $6,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

எனவே, வீட்டை வாடகைக்கு விடுவோர், வாடகைதாரர்களின் அசல் குடிநுழைவு ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. வாடகைதாரர்களின் அசல் கடப்பிதழையும் வேலை அனுமதி அட்டையையும் சரிபார்ப்பதுடன், அதன் செல்லுபடியாகும் தன்மையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதிசெய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்