மூத்த மருத்துவர் ஒருவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்குப் பிறகு, திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 27) ஏழு மாத இடைநீக்கம் விதிக்கப்பட்டது.
தொழில் ரீதியான தவறான நடத்தை காரணமாக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
“மிகுந்த கவனத்துடன் புகாரைப் பரிசீலித்த பிறகு, தண்டனை 14 மாதங்களிலிருந்து ஏழு மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது,” என்று ஒழுங்குமுறை தீர்ப்பாயம் தெரிவித்தது.
12 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குத் தொடர்வதில் ஏற்பட்ட அளவுக்கதிகமான தாமதமே இதற்குப் பெருமளவு காரணம் என்று அது கூறியது. இந்த விவகாரம் மருத்துவருக்குப் பேரளவிலான பாதிப்பை ஏற்படுத்தியதையும் மற்றபடி அவரது சிறந்த மருத்துவச் சேவை வரலாற்றையும் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியது.
முதியோர் மருத்துவ நிபுணரான 72 வயது டாக்டர் தியோ செக் கீ, நோயாளிக்குப் பொருத்தமான பராமரிப்பை வழங்க தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த நோயாளி 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட இரைப்பைக் குடல் இரத்தக் கசிவைக் கண்டறிந்து உறுதிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காதது மற்றும் நோயாளியின் உடல்நிலையைச் சரியாக நிர்வகிக்காதது ஆகியவையும் இதில் அடங்கும்.
சிங்கப்பூர் மருத்துவ மன்றம், டாக்டர் தியோவை ஒழுங்குமுறைத் தீர்ப்பாயத்தின் முன் நிறுத்தியது. அது அவரைக் கடுமையாகக் கண்டித்ததுடன், மன்றத்தின் வழக்கறிஞர்களுக்கான கட்டணம் உட்பட, விசாரணைக்கான ஒட்டுமொத்த செலவுகளையும் செலுத்துமாறு அவருக்கு உத்தரவிட்டது.
இனிமேல் இதுபோன்ற தவறான நடவடிக்கையிலோ அல்லது அதைப் போன்ற வேறு எந்தச் செயலிலோ ஈடுபடமாட்டேன் என்று அவர் மன்றத்திடம் எழுத்துபூர்வமான உறுதிமொழியையும் சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.

