சிங்கப்பூரில் $130 மில்லியன் செலவில் மாபெரும் ஆய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்களுக்கு எதிரான மேம்பாட்டில் மரபணு பற்றிய ஆய்வு, நோய்த் தடுப்புக்கான சிகிச்சை, வளர்ந்து வரும் இத்துறையில் சிங்கப்பூரின் போட்டித்தன்மையை கட்டிக்காப்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மரபணு உயிரியல் மற்றும் அதன் செயல்பாடுகளுக்கான தேசிய முயற்சி (NIRBA) என்று அழைக்கப்படும் ஏழு ஆண்டுகால, $130 மில்லியன் திட்டத்திற்கு தேசிய ஆய்வு அறநிறுவனம் (NRF) ஆதரவு அளிக்கிறது.
மார்ச் 24ஆம் தேதி புதிய திட்டத்தின் விவரங்களை வெளியிட்ட துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், “மரபணு உயிரியல் மற்றும் அதன் செயல்பாடுகள் ஆய்வுகளின் அடிப்படைக்கு மிகவும் முக்கியம்,” என்று குறிப்பிட்டார்.
தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவருமான திரு ஹெங், கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் துரிதமாகச் செயல்பட்டு, தடுப்பூசி விநியோகித்ததில் எண்ணில் அடங்கா உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் கூறினார்.
அப்போதிலிருந்து மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அளிக்கப்படும் சாத்தியமான பல சிகிச்சைகள், செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
மரபணு அடிப்படையிலான சிகிச்சைகள் சோதிக்கப்பட்டு வருகின்றன. புற்றுநோய், வளர்சிதை மாற்ற நோய்கள் உட்பட பலதரப்பட்ட நோய்களுக்கு அத்தொழில்நுட்பம் ஆராயப்பட்டு வருகிறது.
2023ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி, தொற்றுநோய், உயர் கொழுப்பு, அரிய மரபணு நோய் போன்றவற்றை இலக்காகக் கொண்ட குறைந்தது 25 மரபணு தொடர்பான சிகிச்சைகளுக்கு அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக துணைப் பிரதமர் ஹெங் மேலும் தெரிவித்தார்.
அத்தகைய 125க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் மருந்தகச் சோதனைகளின்கீழ் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘நிர்பா’ மூலமாக சிங்கப்பூர் அதன் மரபணு ஆய்வுகளை வலுப்படுத்துவது நோக்கமாகும். முக்கிய ஆய்வுக் கழகங்களுக்கு அது முக்கிய தளமாகவும் இருக்கும். மேலும், அறிவுசார் சொத்துகள் தொடர்பான நிர்வாகத்தைப் பகிர்ந்துகொள்ளவும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தத் தளம் உதவும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஏஸ்டார் ஆகியன மாபெரும் ஆய்வுக்கான ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
ஆய்வுத் திட்டங்களின் உயிரியல், உள்கட்டமைப்பு, வேதியியல் மற்றும் கணக்கீட்டுக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு புதிய இடம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆய்வாளர்கள் ஒன்றுகூடி யோசனைகளைப் பரிமாறிக் கொள்வதற்கான மையமாகவும் இருக்கும்.

