குறைந்த காத்திருப்புக் காலத்துடன் 1,300 பிடிஓ வீடுகள் விற்பனை

குறைந்த காத்திருப்புக் காலத்துடன் 1,300 பிடிஓ வீடுகள் விற்பனை

3 mins read
தெம்பனிசில் கட்டப்படும் வீடுகள் இரண்டு ஆண்டுக்குள் தயாராகும்.
67509ce1-71dd-43c5-b31a-65fc427326a7
தெம்பனிஸ் பிளிஸ் கட்டுமானத் திட்டத்தில் 284 வீடுகள் கட்டப்படும். இதற்கான காத்திருக்கும் காலம் ஓராண்டு, 11 மாதங்களாக இருக்கும். - படம்: வீவக

அரசாங்கம், இம்மாதம் 1,300 தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளை (பிடிஓ) விற்பனைக்கு விடுகிறது.

இவற்றுக்கான காத்திருப்புக் காலம் மூன்று அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகளாக இருக்கும்.

தெம்பனிஸ், செம்பவாங்கில் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.

தெம்பனிஸ் அவென்யூ 1, தெம்பனிஸ் அவென்யூ 22ல் கட்டப்படும் 284 வீடுகளுக்கான காத்திருப்புக் காலம் ஓராண்டு, 11 மாதங்களே என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஜனவரி 31ஆம் தேதி அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த 2018ஆம் ஆண்டில் குறைந்த காத்திருப்புக் காலம் கொண்ட வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு மிக விரைவில் கட்டப்படும் வீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செம்பவாங்கின் செம்பவாங் டெக் வீட்டுத் திட்டம், இரண்டு ஆண்டு, ஒன்பது மாதங்கள் காத்திருப்புக் காலத்தைக் கொண்டது.

மேலும், 4,300 எஞ்சிய வீடுகளும் விற்பனைக்கு வரவிருக்கின்றன. இது, அக்டோபரில் விற்கப்படுவதாக வீவக அறிவித்த 3,000 வீடுகளைவிட அதிகம்.

எஞ்சிய வீடுகளும் விற்பனைக்கு வருவதால் வீடு வாங்க விரும்புவோருக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய பிடிஓ திட்டங்களுக்கான கட்டுமானம் படிப்படியாக முடியும்போது வீடுகள் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

இவற்றில் ஐந்தில் ஒரு வீடு கட்டி முடிக்கப்பட்டதாக இருக்கும். எஞ்சியவை கட்டப்பட்டு வரும் வீடுகள் என்று வீவக குறிப்பிட்டது.

புதிய பிடிஓ வீடுகள் விற்கப்படும் தேதியை வீவக வெளியிடவில்லை.

தோ பாயோ, கிம் கியாட் கிரஸ்ட் குடியிருப்புத் திட்டத்தின் காத்திருப்புக் காலம் மூன்று ஆண்டுகள், ஒரு மாதமாக இருக்கும் என்று வீவக தெரிவித்தது.

கிம் கியாட் அவென்யூ மற்றும் தோ பாயோ கிழக்கில் அமைந்துள்ள இந்தத் திட்டம், இரண்டு அறைகள் கொண்ட ஃப்ளெக்ஸி, மூன்று மற்றும் நான்கு அறைகள் கொண்ட 1,151 வீடுகளைக் கொண்டிருக்கும். இதில் வாடகை புளோக்கும் இருக்கும்.

தோ பாயோ லோரோங் 6ஐச் சுற்றி அமையும் தோ பாயோவின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தில் பல்வேறு வசதிகள் இடம்பெற்று இருக்கும் என்று வீவக கூறியது.

பலதுறை மருந்தகம், நூலகம், பூங்கா, விளையாட்டு வசதிகள் போன்றவை ஒரே இடத்தில் இருக்கும்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், தற்போதைய அரசாங்கத்தின் தவணைத் காலத்திற்குள் இது கட்டி முடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

புக்கிட் மேரா, செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ ஆகிய இடங்களில் ஒட்டுமொத்தமாக 4,692 பிடிஓ வீடுகள் கட்டப்படுகின்றன.

தெம்பனிஸ் பிளிஸ் திட்டத்தில் பத்து புளோக்குகள் முழுவதும் மூவறை, நான்கறை வீடுகள் கட்டப்படும். இந்த மேம்பாட்டில் விளையாட்டுத் திடல், உடற்பயிற்சிக்கான இடம், தோட்டம், உணவகம், பாலர்பள்ளி உள்ளிட்டவை அடங்கும்.

தெம்பனிஸ் பூங்கா இணைப்பு, பிடோக் நீர்த்தேக்கப் பூங்கா, பாசிர் ரிஸ் டவுன் பூங்கா ஆகியவற்றுக்கு குடியிருப்பாளர்கள் எளிதில் சென்று வர பசுமைத் தாழ்வாரம் அமைக்கப்பட்டிருக்கும்.

தெம்பனிஸ் நோவா எனப்படும் மற்றொரு குடியிருப்புத் திட்டம், தெம்பனிஸ் சென்ட்ரல் மையப்பகுதியில் இடம்பெற்று இருக்கும். இதற்கான காத்திருப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் எட்டு மாதங்களாகும்.

தெம்பனிஸ் 5, தெம்பனிஸ் சென்ட்ரல் 8, தெம்பனிஸ் கன்கார்ஸ் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள இது, தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையம் மற்றும் ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ பிலிருந்து ஐந்து நிமிட நடைத் தொலைவில் அமைகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் இரண்டு புளோக்குகளில் ஈரறை, நான்கறை வீடுகள் உட்பட 255 வீடுகள் கட்டப்படுகின்றன.

இந்த மேம்பாடு, சன் பிளாசா பூங்கா, தெம்பனிஸ் பொலிவார்ட் பூங்கா, தெம்பனிஸ் சென்ட்ரல் பூங்கா, சுங்கை தெம்பனிஸ் உட்பட சைக்கிள் பாதைகளை இணைக்கும் வகையில் இருக்கும். பாலர் பள்ளி, உணவகம், மளிகைக் கடைகள் மற்றும் இதர கடைகள் போன்ற வசதிகளை இது உள்ளடக்கியிருக்கும்.

செம்பவாங் டெக் வீட்டுத் திட்டம், புதிய செம்பவாங் நார்த் குடியிருப்பு வட்டாரத்தில் இடம்பெறுகிறது.

இதில், ஈரறை ஃபிளக்ஸி, மூவறை, நான்கறை, ஐந்தறை வீடுகள் உட்பட மொத்தம் 777 வீடுகள் கட்டப்படுகின்றன. இது, அட்மிரால்டி ஸ்திரீட் மற்றும் அட்மிரால்டி லேனுக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டப்படுகிறது.

பொதுமக்களுக்குத் தேவையான பாலர் பள்ளி, உணவகங்கள், மளிகைக் கடைகள் போன்ற வசதிகள் இதில் இருக்கும். செம்பவாங் மார்ட், சன் பிளாசா போன்றவை இவ்வட்டாரத்தில் உள்ளன. மேலும் செம்பவாங் எம்ஆர்டி நிலையத்தை அடுத்துள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு, சமூக நிலையமான புக்கிட் கேன்பராவும் அருகில் உள்ளது.

2026, 2027ஆம் ஆண்டுகளில் காத்திருப்புக் காலத்தைக் குறைப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் 4,000 வீடுகளைக் கட்ட வீவக உறுதி கூறியிருந்தது. இதன் ஒரு பகுதியாக குறுகிய காலத்தில் 1,316 வீடுகள் கட்டி முடிக்கப்படவுள்ளன.

தோ பாயோவில் உள்ள கிம் கியாட் கிரெஸ்ட் வீடுகளுக்கு காத்திருப்புக் காலம் மூன்று ஆண்டுகள், ஒரு மாதமாகும்.
தோ பாயோவில் உள்ள கிம் கியாட் கிரெஸ்ட் வீடுகளுக்கு காத்திருப்புக் காலம் மூன்று ஆண்டுகள், ஒரு மாதமாகும். - படம்: வீவக
குறிப்புச் சொற்கள்