நிலையில்லாத, கணிக்க முடியாத, சிக்கலான, தெளிவற்ற உலகச் சூழலைச் சமாளிக்க விழிப்புணர்வு, ஒற்றுமை, மீள்திறன், சுறுசுறுப்பு ஆகியவை அவசியம் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பா, மத்தியக் கிழக்கு நாடுகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் சூழல்களிலிருந்து இந்த நான்கு முக்கியப் பாடங்களைக் கற்க வேண்டும் என்று திரு சான் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டிற்கான முழுமைத் தற்காப்பு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான் இவ்வாறு கூறினார்.
“பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு அப்பால், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியம்,” என்றார் அவர்.
ஒருவேளை ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தாலோ தாக்குதல் நடத்தப்பட்டாலோ, அதிலிருந்து ஒரு நாடு விரைவாக மீளும் எனில் தாக்குதல்காரர்களை இலக்கை எட்டவிடாமல் தடுக்கலாம் என்றும் அவர் சொன்னார்.
“எனவே, பயங்கரவாத எதிர்ப்பு குறித்துப் பேசும்போது, தடுப்பு, விழிப்பு மட்டுமன்றி, மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைக்கும் எண்ணத்தை ஈடேற விடாமல் வெல்வது குறித்தும் பேசுகிறோம்,” என்றும் அமைச்சர் கூறினார்.
முழுமைத் தற்காப்பு விருதுகள்
இவ்வாண்டு முழுமைத் தற்காப்பில் சிறப்பாகப் பங்களித்த 131 தனிமனிதர்கள், சமூக அமைப்புகள், நிறுவனங்களுக்கு ‘முழுமைத் தற்காப்பு ஆதரவாளர்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் விழா நவம்பர் 6ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேரியாட் டாங் பிளாசா ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
விழாவில், தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங், தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது, அத்துறையின் துணை அமைச்சர் டெஸ்மண்ட் சூ, உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் கோ பெய் மிங் ஆகியோரும் பங்கேற்றனர்.
அவ்விழாவில் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார் கடற்படைக் கண்காணிப்பாளர் (SVC2 Bridge Watchkeeper), திறன்மிக்க இளையர்களுக்கு வழிகாட்டும் ‘ரிவர் வேலி இர்ரெகுலர்ஸ்’ (River Valley Irregulars) சமூகநோக்கு நிறுவனத்தின் இணை நிறுவனர், சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணித் தூதர் எனப் பல துறைகளிலும் பம்பரமாகச் சுழலும் ஷீலா மனோகரன், 31.
இளையர் தொண்டூழியரணியில் பல்வேறு முன்னெடுப்புகளில் பங்காற்றியதையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் ஆயுதப்படைத் தொண்டூழியர் அணியில் பங்காற்றி வருகிறார் ஷீலா.
விமானத்துறையில் கல்வி பயின்று, பணியாற்ற ஆசைப்பட்டாலும், தமது தாய்வழி உறவினர்கள் பலர் கடற்படையில் பணியாற்றுவது கண்டு உந்தப்பட்டு, கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடத் தொடங்கிய ஷீலா, “கப்பல்கள் சரியான பாதையில் பாதுகாப்பாகப் பயணஞ்செய்வதை உறுதிசெய்யும் பணி இது,” என்றார்.
மேலும், இளையர் தொண்டூழியர் அணியின் ஆலோசனைக் குழுவில், இளையர்களுடன் முழுமைத் தற்காப்பு தொடர்பிலும் இவர் பங்காற்றி வருகிறார்.
“இளையர்கள், குடும்பங்கள் என அனைவரும் சிங்கப்பூரர்களாக ஒன்றிணைந்து நமது மீள்திறனை வெளிப்படுத்துவதும், மக்களைப் பாதுகாப்பதும்தான் முழுமைத் தற்காப்பு. அதற்காக இளையர்களுடன் பணியாற்றுவதில் பெருமை,” என்கிறார் இவர்.
பல்வேறு பணிகளிலும் சிறப்பாகச் செயல்படும் இவர், “நேரத்தைத் திட்டமிடல் சிரமம்தான். ஆனாலும், செய்ய வேண்டும் எனும் எண்ணம் மேலோங்கியுள்ளது. அதனால் செய்ய முடிகிறது,” என்றார்.

