மலேசியாவில் பிடிபட்ட 133 கள்ளக் குடியேறிகள்

மலேசியாவில் பிடிபட்ட 133 கள்ளக் குடியேறிகள்

1 mins read
bcee5fdd-f91c-48bc-bcce-b5963024ab2f
பிடிபட்ட கள்ளக் குடியேறிகளிடம் கூடுதல் விசாரணைகள் நடத்தப்படுவதாகக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் சகாரியா ‌‌‌ஷாபன் தெரிவித்தார். - படம்: த ஸ்டார்

செராஸ்: மலேசியாவின் ‌‌‌ஷா அலாம், பலாகோங் ஆகிய இரண்டு பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் 133 சட்டவிரோதக் குடியேறிகள் பிடிபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 162 வெளிநாட்டினரைச் சோதனைச் செய்ததாகக் குறிப்பிட்ட குடிநுழைவுத் துறை அதிகாரிகள், பெரும்பாலோர் குடிநுழைவுச் சட்டத்தை மீறியதைக் கண்டுபிடித்ததாகக் கூறினர்.

“பிடிபட்ட 133 பேரிடமும் கூடுதல் விசாரணைகள் நடைபெறுகின்றன. அவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் சகாரியா ‌‌‌ஷாபன் சொன்னார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கள்ளக் குடியேறிகள், இந்தோனீசியா, பங்ளாதே‌ஷ், இந்தியா, மியன்மார், நேப்பாளம், பாகிஸ்தான், வியட்னாம், சீனா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.

பிடிபட்டோரில் பெரும்பாலோர் 20லிருந்து 45 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள்.

உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு, சுங்கத் துறை, சுற்றுப்புறத் துறை ஆகிய வெவ்வேறு அமைப்புகளுடன் இணைந்து சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டது.

சோதனை நடவடிக்கையின்போது கடத்தப்பட்ட சிகரெட்டுகளையும் வரி செலுத்தப்படாத மதுபானங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட கள்ளக் குடியேறிகளில் சிலர் வெளிநாட்டினருக்கான விசாவில் மலேசியாவுக்குள் நுழைந்து சட்டவிரோதமாக வேலை செய்ததாகக் கண்டறியப்பட்டது.

சோதனை நடவடிக்கையின்போது கள்ளக் குடியேறிகளில் சிலர் அருகில் உள்ள புதர்களுக்குள் ஓடி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். சிலர் ஊழியர்களுக்கான விடுதிகளின் கூரைகள் வழியாகத் தப்பிச் செல்ல முயன்றனர்.

அண்மையில் நடத்தப்பட்ட சோதனைகளைப் போல இவ்வாண்டு முழுவதும் இன்னும் பல்வேறு சோதனைகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்கழிவுகளைக் கையாளும் தொழிற்சாலைகள் அதிகம் குறிவைக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்