கடலோரப் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு ஆய்வுகளுக்குக் கூடுதலாக $135 மில்லியன் நிதி

கடலோரப் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு ஆய்வுகளுக்குக் கூடுதலாக $135 மில்லியன் நிதி

படம்: எஸ்பிஎச் மீடியா

21 Oct 2026 - 1:06 pm

2 mins read

கடலோரப் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு ஆய்வுகளுக்காகக் கூடுதலாக $135 மில்லியன் நிதி, பொதுப் பயனீட்டுக் கழகத்திற்கு (பியுபி) ஒதுக்கப்படுகிறது.

கடல்மட்டம் உயருதல், மிக அதிகமான மழைப்பொழிவு ஆகியவற்றிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்கும் நோக்கில் ‘ஆய்வு, கண்டுபிடிப்பு, தொழில்முனைப்பு 2030’ (ஆர்ஐஇ2030) திட்டத்தின்கீழ் இந்த நிதி ஒதுக்கப்படுவதாகக் கழகம் புதன்கிழமை (அக்டோபர் 21) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

தாழ்நிலத் தீவான சிங்கப்பூர் பருவநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயர்வது, அதிக மழைப்பொழிவு ஆகிய இரட்டைச் சவால்களை எதிர்கொள்கிறது. இவற்றைச் சமாளிக்க திறன்மிக்க, நீடித்த நிலைத்தன்மை கொண்ட, மின்னிலக்கத் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை உருவாக்குவது இந்த நிதியுதவியின் முக்கிய நோக்கம் என்று அறிக்கை குறிப்பிட்டது.

முன்னதாக, ஆர்ஐஇ2030 திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட $125 மில்லியன் நிதியுதவியின் தொடர்ச்சியாக இது அமைகிறது.

புதிய நிதியுதவியின் மூலம் கடலோரப் பாதுகாப்புக் கட்டமைப்புகளின் கட்டுமானத் திறனையும் நீடித்த நிலைத்தன்மையையும் மேம்படுத்துதல், மதகுகள், நீர் இறைக்கும் நிலையங்களின் வடிவமைப்பு, செயல்பாடுகளை மேம்படுத்துதல், கண்காணிப்புப் பணிகளுக்கான மின்னிலக்கத் தீர்வுகளை கண்டறிதல் ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

பயன்பாட்டு ஆய்வு, சிங்கப்பூர்க் கடலோரப் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு நிறுவனத்தின் (சிஇஎஃப் சிங்கப்பூர்) திட்டங்களுடன் தொடங்கும் ஆய்வு மானியக் கோரிக்கைகள் 2027 முதல் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும்.

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (எஸ்ஐடி) புதன்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற சிஇஎஃப் சிங்கப்பூர் கருத்தரங்கில், ஆர்ஐஇ2030 திட்டத்தின்கீழ் எட்டுப் புதிய ஆய்வுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ‘ஏ’ஸ்டார் ஆகியவை மேற்கொள்ளும் அந்த ஆய்வுகளையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 27 ஆய்வுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), செயற்கைக்கோள் படத்தொழில்நுட்பம், அதிவேகமாகப் பயன்படுத்தக்கூடிய நகரும் கடலோரத் தடுப்புகள், ஆளில்லா வானூர்தி, ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்கள் மூலம் இயற்கையான தாவர அமைப்புகளையும் செயற்கைக் கட்டமைப்புகளையும் கண்காணிக்கும் ஆய்வுகள் அவற்றில் அடங்கும். இதுவரை 280க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களும், 36 தொழில்முறை நிறுவனங்களும் இந்த ஆய்வு முயற்சிகளில் பங்கெடுத்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பொதுப் பயனீட்டுக் கழகம்மானியம்வெள்ளம்ஆய்வுதிட்டம்