14 கட்டுமானத் தளங்களில் ‘ஏஐ’ கண்காணிப்புக் கேமராக்கள்; ஊழியர்களின் பாதுகாப்புக்கான சோதனைத் திட்டம்

14 கட்டுமானத் தளங்களில் ‘ஏஐ’ கண்காணிப்புக் கேமராக்கள்; ஊழியர்களின் பாதுகாப்புக்கான சோதனைத் திட்டம்

2 mins read
கடந்த ஆண்டு வேலையிட மரணங்கள் 36ஆகக் குறைந்தது
32a440cd-e6b4-4531-b8f9-c6caa56a5494
பாதுகாப்பு விதிமுறைகள் ஏதேனும் கேமராக்களில் பதிவானால் கட்டுமான பாதுகாப்பு மேலாளருக்கு உடனடியாக ‘டெலிகிராம்’ செயலி மூலம் தகவல் செல்லும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் இனி கட்டுமான பாதுகாப்பு மேலாளர்கள் அடிக்கடி ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பாகக் கண்காணிப்புத் திரைகளைப் பார்க்கத் தேவையில்லை.

கட்டுமானத் தளத்தில் ஏதேனும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் மேலாளருக்குக் கைப்பேசி வழி அறிவிப்புச் செல்லும். கட்டுமானத் தளத்தில் பொருத்தப்பட்டுள்ள ‘ஏஐ’ கண்காணிப்புக் கேமராக்கள் அந்த வேலையைச் செய்யும்.

SafeSite VA என்று அழைக்கப்படும் அந்தப் பாதுகாப்பு நடைமுறை, தற்போது 14 கட்டுமானத் தளங்களில் சோதனை முயற்சியில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

“2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி முதல் இந்தச் சோதனை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இது இவ்வாண்டு ஜூன் மாதம் வரை தொடரும். அதன் பிறகு இவை மற்ற கட்டுமானத் தளங்களிலும் சோதிக்கப்படுமா என்பது குறித்த முடிவு எடுக்கப்படும்,” என்று மனிதவளத் துணை அமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) தெரிவித்தார்.

பாசிர் ரிஸ் கோஸ்ட் தொழிலியல் பூங்கா கட்டுமானத் தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு தினே‌ஷ், 2025ஆம் ஆண்டில் வேலையிடம் தொடர்பான மரணங்கள் குறைந்ததாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 36 வேலையிட மரணங்கள் பதிவாகின. 2024ல் அது 43ஆகப் பதிவானது. வாகனங்கள் தொடர்பான வேலையிட விபத்துச் சம்பவங்கள் அந்த ஆண்டு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தரவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை அந்தத் தகவல்கள் வெளியிடப்படுவது வழக்கமாகும்.

“ஒரு மரணச் சம்பவமாக இருந்தாலும் அது பெரிய கவலைதான்,” என்று கூறிய திரு தினே‌ஷ், இப்புதிய சோதனைத் திட்டம் மூலம் பாசிர் ரிஸ் கட்டுமானத் தளத்தில் பாதுகாப்பற்ற முறையில் செயல்படும் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறினார்.

ஆறு ஹெக்டர் பரப்பளவில் உள்ள பாசிர் ரிஸ் கட்டுமான தளத்தில் 31 கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளன. அவற்றில் 10க்கு காணொளி ஆய்வு வசதி உள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகள் ஏதேனும் கேமராக்களில் பதிவானால் கட்டுமான பாதுகாப்பு மேலாளருக்கு உடனடியாக ‘டெலிகிராம்’ செயலி மூலம் தகவல் செல்லும். அதன்பிறகு மேலாளர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானத் துறைகட்டுமானம்வெளிநாட்டு ஊழியர்