சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகத்தில் சாயங்களைத் தெளித்து குறும்புச் செயலில் ஈடுபட்டவருக்கு தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் இருந்தபோது சாயங்களைத் தெளித்து காதலருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார் 24 வயது மிஷல் லியோங் யி லிங்.
அவரை 14 நாள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவியல் பதிவு இல்லாமல் அவர் 14 நாள் சிறையில் வைக்கப்படுவார்.
செம்பம்பர் மாதத்தில் குறும்புத்தனத்துடன் நடந்துகொண்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார்.
அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்போது அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.
ஃபோர்ட் கேனிங் ரோட்டுக்கு அருகே பினாங்கு லேனில் உள்ள அந்தக் கட்டடத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் திறந்துவைத்த ஒரு வாரத்திற்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு முன்பு விடியற்காலையில் டோபிகாட்டில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் லியோங் தனது காதலர் கீத் ஓங் வெய் ஹானுடன், 28 மதுபானம் குடித்துள்ளார்.
அரை போத்தல் வோட்காவை பகிர்ந்து குடித்த இருவரும் பின்னர் செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்திற்குச் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அங்கு லியோங் கட்டடத்தின் தூணில் கறுப்பு வண்ணச் சாயத்தைத் தெளித்தார். இருவரும் சில வார்த்தைகளையும் சாயத்தால் எழுதியிருந்தனர். “I’ll Kill every1” என்றும் எழுதப்பட்டிருந்தது. பின்னர் இருவரும் உற்சாகமாக படம் எடுத்துக் கொண்டனர். அவரது காதலர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.