தொடர்ந்து இயங்குவதற்குரிய ஆதாரத்தைத் தருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 14 அரசியல் கட்சிகள் சிங்கப்பூரின் வெளிநாட்டுத் தலையீட்டுச் சட்டத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்று உள்துறை அமைச்சு (ஆகஸ்ட் 12) தெரிவித்துள்ளது.
அரசிதழில் கட்சிகளிடம் ஆதாரத்தைத் தருமாறு சங்கங்கள் பதிவகம் ஆகஸ்ட் 7ஆம் தேதி கோரியதற்கு என்ன காரணம் என்று ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஊடகம் கேட்டிருந்தது. அதற்கு உள்துறை அமைச்சு பதில் தந்தது. அந்தக் கட்சிகள் தொடர்ந்து இயங்காததால் வெளிநாட்டுத் தலையீட்டு (எதிர் நடவடிக்கைகள்) சட்டத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாமல் இருக்கக்கூடும் என்று அமைச்சு தெரிவித்தது.
“கட்சிகள் தொடர்ந்து செயல்படுகின்றன என்பதற்குப் புதிய தகவல் கிடைத்தால், வெளிநாட்டு, அரசியல் வெளியீட்டுப் பதிவகம் அவற்றைத் தொடர்புகொள்ளும்,” என்று அமைச்சு சொன்னது.
இரண்டு பதிவகங்களும் உள்துறை அமைச்சின்கீழ் செயல்படுகின்றன.
சட்டத்தின்கீழ், கட்சிகள் தெரிவிக்கவேண்டியவற்றை நிர்வகிப்பது வெளிநாட்டு, அரசியல் வெளியீட்டுப் பதிவகத்தின் பொறுப்பு.
அந்தச் சட்டத்தின்படி, அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படும். நன்கொடைகள், தொண்டூழியர்கள், தலைமைத்துவம், தொடர்புகள் குறித்து அவை ஆண்டுதோறும் தெரிவிக்கவேண்டியது கட்டாயம்.
உதாரணத்திற்கு, ஒரே தவணையில் $10,000 அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையை நன்கொடையாகப் பெற்றால் கட்சிகள் அதனைத் தெரியப்படுத்த வேண்டும். வெளிநாட்டினரிடமிருந்து நன்கொடைகள் பெறுவதற்கும் அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அரசாங்கங்கள், குடிநுழைவு அனுகூலங்களைக் கொடுத்தால் அவற்றையும் தனிமனிதர்கள் தெரிவிக்கவேண்டும். கௌரவக் குடியுரிமை, நிரந்தரவாசத் தகுதி முதலியவை அவற்றுள் அடங்கும்.
அரசிதழில் இடம்பெற்ற 14 அரசியல் கட்சிகளில் பாரிசான் சோஷலிசும் ஐக்கிய மக்கள் கட்சியும் அடங்கும். 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவுசெய்யப்பட்ட பாரிசான் சோஷலிஸ், ஒரு காலத்தில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய எதிர்க்கட்சியாக இருந்தது. ஐக்கிய மக்கள் கட்சி, 1961ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்கள் செயல் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஓங் எங் குவானால் நிறுவப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
14 கட்சிகளில் ஒன்று மட்டும் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவுசெய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி பதிவுசெய்யப்பட்ட மக்கள் மிதவாத ஜனநாயகக் கட்சியே அது.
சம்பந்தப்பட்ட 14 கட்சிகளையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) தெரிவித்தது.

