சிங்கப்பூர் விலங்கியல் தோட்ட இயக்குநருக்கு $235,000க்கும் அதிகமான தொகையை லஞ்சமாகத் தந்த சோங் சீ வாய் எனும் ஆடவருக்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான அவர், கடானா எஞ்சினியரிங் எனும் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார்.
தற்போது மண்டாய் வனவிலங்குக் குழுமம் என்று அழைக்கப்படும் அப்போதைய சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தில் (டபிள்யுஆர்எஸ்) இயக்குநராகப் பணியாற்றிய பேரி சோங் பெங் வீக்கு அவர் லஞ்சம் தந்தாகக் கூறப்பட்டது.
அதனால் டபிள்யுஆர்எஸ், $1.93 மில்லியன் மதிப்பிலான குத்தகையை கடானா எஞ்சினியரிங் நிறுவனத்திற்கு வழங்கியது.
சோங் சீ வாய் $142,000 தொடர்பான ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து ஆகஸ்ட் 27ஆம் தேதி அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கும்போது, எஞ்சிய தொகையுடன் தொடர்புடைய மேலும் 15 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. அவர் அந்தக் குற்றங்களை 2014ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடையில் புரிந்தார்.
இவ்வழக்கில் தொடர்புடைய டூ சே கியோங் என்பவருக்கு 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஈராண்டுகள் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஷின் யோங் கன்ஸ்டரக்ஷன் எனும் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
பேரி சோங் மீதான வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. டூ உட்பட நிறுவனத்தின் இதர முக்கிய ஊழியர்களுடன் இணைந்து 2005ஆம் ஆண்டு பேரி சோங் ஊழலில் ஈடுபட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் அதேபோன்ற ஊழல் நடவடிக்கையில் மற்ற குத்தகையாளர்களை ஈடுபடுத்த முனைந்தார் டூ. சோங் சீ வாய் அதற்கு ஒப்புக்கொண்டு ஊழலில் ஈடுபட்டார்.
இவர்களது ஊழல் நடவடிக்கையால் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்திற்கு $235,000க்குமேல் இழப்பு ஏற்பட்டது.
2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் இது வெளிச்சத்துக்கு வந்தது.
சோங் சீ வாய், செப்டம்பர் 27ஆம் தேதி தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார். தற்போது அவர் $50,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

