சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் விலைமாதர் தொடர்பான நடவடிக்கைகளை முறியடிக்க இருநாட்டு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 14 பேர் சிக்கினர்.
நவம்பர் 4 முதல் 20 வரை 17 நாள்கள் அந்தச் சோதனை நடவடிக்கை நீடித்தது. சிங்கப்பூர் காவல்துறையும் ஹாங்காங் காவல்துறையும் இணைந்து 13 இடங்களில் சோதனை நடத்தின.
கைதானோரில், 24க்கும் 44க்கும் இடைப்பட்ட வயதுடைய 10 பெண்களும் அடங்குவர்.
பிடிபட்ட 14 பேரில், எட்டுப் பேர் விலைமாதர் தொழிலுக்குத் துணைபுரிந்ததாகவும் எஞ்சிய ஆறு பேர் விலைமாதர்கள் என்றும் வியாழக்கிழமை (நவம்பர் 21) சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரில் நடத்தப்பட்ட சோதனையின் போது, இணையத்தில் விலைமாதர் கும்பலை வழிநடத்திய குற்றத்திற்காக 33 வயது ஆடவர் பிடிபட்டார்.
அதனைத் தொடர்ந்து 24க்கும் 31க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று விலைமாதர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
கைது செய்யப்பட்டோரிடம் இருந்து கைப்பேசிகளும் விலைமாதர் தொழிலுக்குப் பயன்படுத்திய சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
விலைமாதர் தொழில் நடத்தும் கும்பல்கள், நாடுகடந்து தங்களது செயல்களை விரிவுபடுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக சிங்கப்பூர் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் இயோ யீ சுவான் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மற்றவரின் விலைமாதர் தொழில் மூலம் கிடைத்த பணம் என்று தெரிந்தே அந்தப் பணத்தில் வாழ்க்கை நடத்துவோருக்கு அதிகபட்சமாக ஏழாண்டு சிறைத் தண்டனையும் $100,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

