ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக யுஓபி வங்கியின் முன்னாள் ஊழியர் லோ ஷெங் யாங் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் நாணய ஆணையம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) அவருக்கு 14 ஆண்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர் புரிந்த குற்றங்கள் “அவர் நிதி ஆலோசனை, மூலதனச் சந்தைச் சேவைகளை நேர்மையாகச் செய்ய மாட்டார்” என்று நம்புவதற்கு காரணம் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியது.
பிப்ரவரி 15ஆம் தேதி, லோ ஒன்பது குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் 13 குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டன. அவருக்கு ஐந்து ஆண்டுகள், எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2021 ஜூன் 10 தேதிக்கும் 2023 பிப்ரவரி 6ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் போலியான ‘யுஓபி’ வங்கி வைப்புத் தொகைகளில் கையெழுத்திட வைத்து, 17 பேரிடம் $1 மில்லியனுக்கும் மேல் லோ ஷெங் யாங் மோசடி செய்துள்ளார் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியுள்ளது.