14 வயது சிங்கப்பூர்ச் சிறுவன்மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்குச் சென்று ஆயுதமேந்தி வன்முறையில் ஈடுபடவும் உயிரை மாய்த்துக்கொள்ளவும் அவர் தயாராக இருந்தார்.
சிறுவன், உயர்நிலை மூன்றாமாண்டு மாணவர். கடந்த ஈராண்டில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மூன்றாம் 14 வயது மாணவர் அவர். குடும்பத்தில் யாராவது நெருக்கமானவர்கள் தீவிரவாதப் போக்கிற்கு மாறினால், அதிகாரிகளின் உதவியை நாடுமாறு உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு மக்களைக் கேட்டுக்கொண்டது.
சிறுவன், 12 வயதாக இருந்தபோது, 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இணையத்தின் மூலம் ஐஎஸ்ஐஎஸ் போராளித்துவ அமைப்பின் தீவிரவாதச் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டார்.
அவர், ஐஎஸ் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தேடினார். பின்னர் ஐஎஸ் தொடர்பான மேலும் பல பதிவுகள் இணையத்தில் அவரைத் தேடிவரத் தொடங்கின. சமூக ஊடகத்தின்மூலம் ஐஎஸ் ஆதரவு இணையத்தளத்தை மாணவர் கண்டார். அதன் தீவிரவாதச் சித்தாந்தப் பதிவுகளை அன்றாடம் ஏறக்குறைய ஒன்பது மணி நேரம் படித்தார்.
ஒரே ஆண்டில் அவர், ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளரானார். விசுவாசியாக இருப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்ட அவர், தம்மை ஐஎஸ் உறுப்பினராகக் கருதினார்.
இணைய விளையாட்டுகளைத் தயாரிக்க உதவும் ரோப்ளோக்ஸ் தளத்திலும் கோர்போக்ஸ் இணைய விளையாட்டிலும் ஐஎஸ் ஆதரவுக் காணொளிகளை மாணவர் உருவாக்கினார். ராணுவத் தளங்கள் மீதான பாவனைத் தாக்குதல்கள் அந்தக் காணொளிகளில் இடம்பெற்றிருந்தன.
இன்னும் 10 ஆண்டுகளில் சிரியா, ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, ஈராக், இந்தோனீசியாவின் பாலித் தீவு முதலியவற்றுக்குப் பயணம் செய்து போர்க்களத்தில் மடிய மாணவர் திட்டமிருந்ததாக உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு (2025) நவம்பரில் சிறுவனுக்கு எதிராகக் கட்டுப்பாட்டு உத்தரவை உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு பிறப்பித்தது. அதன்படி அவர் வெளிநாட்டுக்குச் செல்லவோ அனுமதியின்றிச் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தவோ முடியாது.
இதற்கிடையே, சென்ற ஆண்டு டிசம்பரில், 18 வயது சிங்கப்பூரரைத் தடுப்புக் காவலில் இருந்து விடுவித்ததாக உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு புதன்கிழமை (ஜனவரி 28) தெரிவித்தது.
அல் காய்தா, ஐஎஸ் ஆதரவாளரான அவர், சிங்கப்பூரில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
கடும் மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் இளையர் நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்தியதாகவும் அவரால் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கணிக்கப்பட்டதாகவும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு கூறியது.
மேலும், சிங்கப்பூரர்கள் மூவர் மீதான கட்டுப்பாட்டு உத்தரவுகளும் முடிவுக்கு வந்தன. 44 வயது மக்ஷாம் முகம்மது ஷா, 17 வயது ஆடவர், 63 வயது முகம்மது காலிம் ஜாஃபர் ஆகியோரே அவர்கள்.

