உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிங்கப்பூரர்கள் இருவருக்குக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அவர்களில் ஒருவர் 14 வயதுச் சிறுவன்.
தீவிரவாதச் சித்தாந்தங்களைப் படித்த ஒரே ஆண்டிற்குள் அவர் ஐசிஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பையும் வலசாரி, இடசாரித் தீவிரவாதத்தையும் கம்யூனிசத்தையும் ஆதரிக்கத் தொடங்கினார். பெண்களையும் யூதர்களையும் அவர் வெறுத்தார்.
ஒசாமா பின் லாடன், ஹிட்லர், கிம் ஜோங் இல் ஆகியோரை அவர் முன்மாதிரியாகக் கொண்டார்.
வெளிநாட்டுத் தீவிரவாதிகள் சிலருடன் அவர் தொடர்பில் இருந்தார். சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த அவருக்கு உதவுவதாகக் கூறிய தீவிரவாதிகளில் ஒருவர், வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான கையேடுகளையும் அனுப்பிவைத்தார்.
தாக்குதல் நடத்தச் சிறுவன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முஸ்லிமான அவர், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை நிராகரித்தார்.
சமூக ஊடகங்களில் ஐசிஸ் தொடர்பான தகவல்களை அதிக அளவில் படித்த அவர், பெரியவரானதும் அந்தக் குழுவினருக்காகப் போராடத் திட்டமிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளித் தோழர்கள் சிலருடன் தீவிரவாதச் சித்தாந்தங்களை அவர் பகிர்ந்துகொண்டார். ஆனால் எவரும் தீவிரவாதப் போக்கிற்கு மாறவில்லை.
சிறுவன் தீவிரவாதப்போக்கிற்கு மாறியது பற்றி அவரின் குடும்பத்தாருக்குத் தெரியாது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மற்றொருவர் 30 வயது ஆடவர்.
சிங்கப்பூரரான முஹம்மது ஜிஹாதுல் முஸ்ட்டாக்கிம் மஹ்முத் சுயதொழில் செய்பவர்.
சிரியாவிலும் கிரீசிலும் அவர் ஆயுதமேந்திப் போராட விரும்பினார்.
சிரியா பூசல் பற்றி 2011ல் தெரிந்துகொண்ட ஜிஹாதுல், அந்நாட்டில் ஆசாதின் ஆட்சிக்கு எதிராகப் போராட நினைத்தார்.
2019ல் அவர் வாழ்வில் தனிப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கினார். அதே ஆண்டு சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்களில் சேர்ந்து போராடி, அர்த்தமுள்ள வகையில் மரணமடைய அவர் விரும்பினார்.
துருக்கியைத் தற்காக்கும் நோக்கத்துடன் கிரீசுக்கு எதிராக ஆயுதமெடுக்கவும் அவர் முடிவெடுத்தார். ஜிஹாதுல் அதற்காகக் காணொளிகளைப் பார்த்தார். இவ்வாண்டு பிப்ரவரி மாத விடுமுறையின்போது தாய்லாந்தின் புக்கெட் நகரில் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியில் அவர் ஈடுபட்டார்.
ஜிஹாதுலின் திட்டங்கள் பற்றி அவரின் குடும்பத்தார் அறிந்திருக்கவில்லை.
அவருக்கு ஜூலையில் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.