சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 140 சம்பவங்களில் விசாரணை

2 mins read
68342118-cc19-4e9b-bdc3-803f36622ec1
சிறார் தடயவியல் வட்டாரப் பயிலரங்கில் சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் ஜோனதன் கெப்லான், சமுதாய குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய தொழில்நுட்பம் காரணமாக சிறார்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்.

இத்தகைய சம்பவங்களில் குற்றவாளிகளைத் தண்டிப்பது அதிகாரிகளுக்குச் சவாலாக இருக்கிறது.

இதனைச் சமாளிக்க அனைத்துலக சட்ட அமலாக்கத்திற்கு இருக்கும் ஒரே வழி ஒன்றுபட்டு செயல்படுவதுதான் என்று சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் ஜோனதன் கெப்லான் (செப்டம்பர் 16) திங்கட்கிழமை தெரிவித்தார்.

சிங்கப்பூர் காவல்துறை கேன்டோன்மண்ட் வளாகத்தில் சிறார் தடயவியல் வட்டாரப் பயிலரங்கை தொடங்கிவைத்து அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 180 அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஐந்து நாள் நிகழ்ச்சி, செப்டம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாள் நிகழ்ச்சியில் உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் பங்கேற்றார்.

சிங்கப்பூர் காவல் படையும் அமெரிக்க உள்துறை பாதுகாப்பு விசாரணை அமைப்பும் (எச்எஸ்ஐ) இந்தப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன.

எச்எஸ்ஐ, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பின் முதன்மை விசாரணை அமைப்பாகவும் எல்லை கடந்த குற்றம் மற்றும் அச்சுறுத்தல்களையும் விசாரிக்கும் பிரிவாகவும் செயல்படுகிறது.

இதில் தொடர்ந்து பேசிய திரு கெப்லான், சிறார்களை தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

“சமூக ஊடகங்கள், இணையத்தள விளையாட்டுகள் போன்றவை உலகம் முழுவதும் சிறார்களுடன் குற்றச்செயல் புரிபவர்கள் தொடர்புகொள்ள வழிவகுக்கிறது,” என்றார் அவர்.

இதே பயிலரங்கில் பேசிய திருவாட்டி சுன், தொழில்நுட்பம் சார்ந்த குற்றச்செயல்களைச் சமாளிக்க குற்றவியல் சட்டத்தில் 2019ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

மேலும் சிறார் துன்புறுத்தல் பொருள்கள் தொடர்பான 140 விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2020ஆம் ஆண்டு ஜனவரி 1ல் அறிமுகப்படுத்தப்பட்ட தண்டனைச் சட்டத்தில் உள்ள பிரத்தியேகச் சட்டங்கள், சிறுவர் பாலியல் தொடர்பான பொருள்களைத் தயாரித்தல், விநியோகித்தல், விளம்பரம் செய்தல் மற்றும் வைத்திருப்பதைக் குற்றமாக்குகின்றன.

திருவாட்டி சுன், தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்தால் குற்றங்கள் அதிகரிக்கும்போது அதற்கான சட்டக் கட்டமைப்பையும் உருவாக்குவது அவசியம் என்று கூறினார்.

சிங்கப்பூர், ஹாங்காங், புருணை, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பயிலரங்கில் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்