சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் அதிக வீடுகளைக் கட்டும் இலக்கின்படி, 2035ஆம் ஆண்டுக்குள் செம்பவாங் நார்த், உட்லண்ட்ஸ் நார்த் ஆகிய இரு புதிய வீடமைப்புப் பேட்டைகளில் கிட்டத்தட்ட 14,000 வீடுகள் கட்டப்பட உள்ளன.
அதில், முதலாவது தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டுத் திட்டங்கள் அடுத்த ஆண்டு அங்கு தொடங்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) அறிவித்தார்.
வடக்கில் மலிவு விலையில் புதிய வீடுகளைக் கணிசமான அளவில் வழங்குவதற்கான முயற்சிகளின் அடிப்படையில் இந்தத் திட்டங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈசூனில் புதிய செஞ்சாரு வீட்டுப் பகுதியைக் கட்டுவதற்கான அறிவிப்புக்குப் பிறகு இது வருவதாகவும் திரு லீ கூறினார்.
முதலாவது புதிய பேட்டையான செம்பவாங் நார்த்தில் 8,000 பிடிஓ வீடுகளும் 2,000 தனியார் வீடுகளும் கட்டப்படும். இரண்டாவது பேட்டையான உட்லண்ட்ஸ் நார்த் கோஸ்ட்டில் சுமார் 4,000 புதிய வீடுகள் கட்டப்படும்.
வீவக வடிவமைப்பு, கட்டுமானம், பொறியியல் விருது வழங்கும் விழாவில் பேசிய திரு லீ, சொத்துச் சந்தையை நிலையானதாக வைத்திருக்க புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சீராக வழங்குவது முக்கியம் என்றார்.
53 ஹெக்டர் பரப்பளவில் இருக்கும் செம்பவாங் நார்த்தில் புதிய அக்கம்பக்க மையம், 1 ஹெக்டர் பூங்காவில் விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் போன்ற வசதிகளுடன் அமைந்திருக்கும்.
செம்பவாங்கின் தெற்கில் உள்ள சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்பாளர்களை 2024ஆம் ஆண்டுக்குள் துவாஸ் பகுதிக்குச் செல்லவிருக்கும் செம்பவாங் கப்பற்பட்டறை தளத்தின் வடக்கில் உள்ள எதிர்கால நீர்முனை மேம்பாடுகளுடன் இணைக்கும் ஒரு பசுமை இணைப்பாக இந்தப் பூங்கா அமையும் என்று திரு லீ கூறினார்.
அப்பகுதியில் உள்ள போக்குவரத்து வசதிகளுடன் குடியிருப்பாளர்களை இணைக்க சைக்கிள் பாதைகள், பாதசாரி நடைபாதைகளின் கட்டமைப்பு இருக்கும் என்று வீவக தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அக்டோபர் 22 அன்று அறிவிக்கப்பட்ட மற்றொரு புதிய பேட்டையான உட்லண்ட்ஸ் நார்த் கோஸ்ட் 21 ஹெக்டர் கலப்பு பயன்பாட்டு நீர்முனை பேட்டையாக இருக்கும். அங்குள்ள முதலாவது திட்டம் பிப்ரவரி 2025ல் அடுத்த பிடிஓ வீடு வழங்கும் திட்டத்தில் வெளியிடப்படும்.
இது, உட்லண்ட்சை வடக்கு வட்டார மையமாக மாற்ற 2017ல் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கீழ் அமையவுள்ள அண்மைய முயற்சியாகும்.
உட்லண்ட்ஸ் நார்த் கோஸ்டில் வசிப்பவர்கள், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் ஜோகூர் பாரு-ஆர்டிஎஸ் இணைப்பு நிலையத்தின் சிங்கப்பூர் முனையத்துக்கு நடந்தே செல்லலாம்.
இது தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்துடன் நிலத்தடியிலும் இணைக்கப்படும்.
“உட்லண்ட்ஸ் நார்த் பகுதியில் வசிப்பவர்கள் விரைவான எல்லை தாண்டிய பயணத்தின் மூலம் பயனடைவார்கள். மேலும் வீட்டிற்கு அருகில் இருக்கும் அதிக வேலைவாய்ப்புகள் மூலமும் பயனடைவார்கள்,” என்று அமைச்சர் லீ கூறினார்.

