தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 141 வாகனங்கள் சிக்கின

2 mins read
4214e33e-539e-4cd5-96be-e876a38315ef
மாற்றியமைக்கப்பட்ட புகை வெளியேற்றுக் குழாய், வாகனத்துக்குள் உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியாத அளவுக்கு, அனுமதிக்கப்பட்டதைவிட அடர் கருநிற கண்ணாடி, அனுமதிக்கப்படாத வாகன எண் பலகை, அலங்கார விளக்குகள் உட்பட பல்வகை மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. - படங்கள்: நிலப் போக்குவரத்து ஆணையம்/ஃபேஸ்புக்

கடந்த இரண்டு மாதங்களில், 141 வாகனங்கள் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தத் தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (ஜூலை 2) வெளியிட்டது.

மாற்றியமைக்கப்பட்ட புகை வெளியேற்றுக் குழாய், வாகனத்துக்குள் உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியாத அளவுக்கு, அனுமதிக்கப்பட்டதைவிட அடர் கருநிற கண்ணாடி, அனுமதிக்கப்படாத வாகன எண் பலகை, அலங்கார விளக்குகள் உட்பட பல்வகை மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

தீவெங்கும் நடத்தப்பட்ட அமலாக்கப் பணிகளின்போது இந்த வாகனங்கள் சிக்கியதாக இன்ஸ்டகிராமில் ஆணையம் பதிவிட்டது.

வாகனங்களிலிருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கக்கூடிய புகையின் கடுமையான தன்மையைக் குறைக்கும் கருவி, வாகனங்களின் இயந்திரம் ஏற்படுத்தும் சத்தத்தைக் குறைக்கும் கருவி ஆகியவற்றை அகற்ற ஓட்டுநர்களுக்கு அனுமதி இல்லை என்று OneMotoring இணையப்பக்கம் தெரிவித்தது.

வாகனங்களில் மின்னும் விளக்குகள் போன்ற அலங்கார விளக்குகளைப் பொருத்தக்கூடாது.

குறைந்தது 70 விழுக்காடு ஒளி ஊடுருவும் தன்மையை வாகனத்தின் முன் கண்ணாடியும் பக்கவாட்டில் உள்ள சன்னல் கண்ணாடிகளும் கொண்டிருக்க வேண்டும்.

வாகனத்தின் பின்புறக் கண்ணாடி, 25 விழுக்காடு ஒளி ஊடுருவக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

வாகனங்களைச் சட்டவிரோதமாக மாற்றியமைத்த குற்றத்துக்காக 2024ஆம் ஆண்டில் ஏறத்தாழ 4,000 அபராதங்கள் விதிக்கப்பட்டதாக ஆணையம் இதற்கு முன்பு தெரிவித்திருந்தது. 2023ஆம் ஆண்டில் 5,000 அபராதங்கள் விதிக்கப்பட்டன.

வாகனங்களைச் சட்டவிரோதமாக மாற்றியமைக்கும் சேவைகளை வழங்கிய 23 வாகனப் பட்டறைகள் மீது 2021ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

வாகனங்களை சட்டவிரோதமாக மாற்றியமைக்கும் தனிநபர்கள், வாகனப் பட்டறை உரிமையாளர்கள் ஆகியோருக்கும் அத்தகைய வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கும் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இக்குற்றத்தைத் தொடர்ந்து புரிபவர்களுக்கு தண்டனை இரட்டிப்படையும்.

குறிப்புச் சொற்கள்