மோசடிக் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் சிங்கப்பூரில் 143 நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று காவல்துறை புதன்கிழமை (டிசம்பர் 31) அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏறத்தாழ $4மில்லியன் மதிப்புள்ள இழப்புகள் நடந்துள்ள 400 மோசடிக் குற்றங்களில் விசாரிக்கப்படுவோரின் வயது 16 முதல் 79 ஆகும்.
கடந்த டிசம்பர் மாதம் 19, 20ஆம் தேதிகளில் காவல்துறையின் வர்த்தகப் பிரிவும் ஏழு நிலக் காவல்நிலையங்களும் நடத்திய சோதனைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மின்வர்த்தகப் பரிவர்த்தனை, நண்பர்கள் போல நடித்தல், அரசாங்க அதிகாரிகள் என ஆள்மாறாட்டம், வேலைவாய்ப்பு வழங்குதல், முதலீடு செய்தல், வாடகை வீடு ஏற்பாடு போன்ற பலவகையான மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையில் இருப்பவர்களில் 102 ஆடவர்கள், 41 பெண்கள் அடங்குவர். அவர்கள் மோசடிக்காரர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் என்று சந்தேகிக்கப்படுகின்றனர்.
மோசடி செய்தல், கள்ளப்பண பரிமாற்றம், உரிமம் இன்றி கட்டணச் சேவை வழங்குதல் ஆகிய குற்றங்களுக்கும் விசாரிக்கப்படுகின்றனர்.
டிசம்பர் மாதம் 30ஆம் தேதிமுதல் மோசடி சார்ந்த குற்றங்கள் புரிவோர், மோசடி கும்பல்களுக்கு ஆட்கள் சேர்ப்போர் போன்றோருக்குக் கட்டாய தண்டனையாக ஆறு முதல் 24 பிரம்படிகள் விதிக்கப்படும்.
மேலும் மோசடிக்காரர்களுக்குத் துணையாக இருப்போர், இடைத் தரகர்களாகக் கள்ளப்பணத்தை வைத்திருப்போர், தொலைபேசி ‘சிம்’ அட்டைகளைக் கொடுப்போர், சிங்பாஸ் மறைச்சொல்லை வெளியிடுவோர் ஆகியோருக்கும் 12 பிரம்படிகள் வரை தண்டனை வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வங்கிக் கணக்குகளை அல்லது கைத்தொலைபேசிகளை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வதாகக் கேட்டுக்கொண்டால் அவற்றை எப்போதும் நிராகரிக்கும்படி பொதுமக்கள் காவல்துறையால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மோசடி பற்றிய மேல்விவரங்களுக்கு பொதுமக்கள் www.scamshield.gov.sg இணையப் பக்கத்தைப் பார்வையிடலாம்.

