$15.1 பில்லியன் உபரி பொருளியல் நிச்சயமற்ற சூழலைக் காட்டுகிறது: நிபுணர்கள்

$15.1 பில்லியன் உபரி பொருளியல் நிச்சயமற்ற சூழலைக் காட்டுகிறது: நிபுணர்கள்

2 mins read
3b9844e2-21f2-409c-8457-65a9ffd29d72
சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டத்தின் எதிர்பாரா ஆகப் பெரிய $15.1 பில்லியன் உபரி, அனைத்துலகப் பொருளியலின் நிச்சயமற்ற சூழலைப் பிரதிபலிப்பதாகப் பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டத்தின் எதிர்பாராத ஆகப் பெரிய $15.1 பில்லியன் உபரி, அனைத்துலகப் பொருளியலின் நிச்சயமற்ற சூழலைப் பிரதிபலிப்பதாகப் பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னுரைக்கப்பட்டதைவிட பொருளியல் சிறப்பாக செயல்பட்டதால் அரசாங்கம் அதன் வருவாயைக் குறைத்து எடைபோட்டுவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே அதன் மூலம் கிடைத்த உபரி மீண்டும் சமூகத்தில் முதலீடு செய்யப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேட்டுக்கொண்டனர்.

சொத்து சமத்துவமின்மை, குடியிருப்புப் பேட்டைகளின் மேம்பாடு உள்ளிட்ட நீண்டகால சவால்களைச் சமாளிக்க அந்த உபரி பயன்படுத்தபடவேண்டும் என்று அவர்கள் கோரினர்.

அரசாங்கத்துக்குக் கிடைத்த உபரி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 1.9 விழுக்காடு. அரசாங்கம் கடந்த நிதியாண்டில் முன்னுரைத்த $6.8 பில்லியனைவிட அது இரண்டு மடங்கு அதிகம்.

இம்மாதம் 12ஆம் தேதி வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கம் செய்த பிரதமரும் நிதியமைச்சருமான திரு லாரன்ஸ் வோங், எதிர்பார்த்ததைவிட பொருளியல் வளர்ச்சி 2025ஆம் ஆண்டில் சிறப்பாக அமைந்ததாகக் குறிப்பிட்டார். பொருளியல் வளர்ச்சி முன்னுரைக்கப்பட்டதைவிட ஐந்து விழுக்காடாக இருந்தது என்றார் அவர்.

உபரியின் பெரும்பங்கு வகிக்கும் நிறுவன வருமான வரி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 4 விழுக்காடு என்றார் ஒசிபிசி வங்கி தலைமைப் பொருளியல் நிபுணர் செலினா லிங். அது வழக்கமான மூன்று விழுக்காட்டைவிட அதிகம் என்றார் அவர்.

வசூலிக்கப்பட்ட வரி $2.57 பில்லியன் என மேல்நோக்கி திருத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார் இணைப் பேராசிரியர் சியா. நிதி, தொழில்நுட்பம், வணிகம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வலுவான லாபத்தை அவை குறிப்பதாக அவர் சொன்னார்.

வாகன உச்சவரம்பு சந்தாக்கள், முத்திரை வரி ஆகியவற்றால் பெறப்பட்ட வரி வசூலும் மிகப் பெரிய உபரியைப் பெற காரணங்கள் என்றார் பேராசிரியர் சியா.

இதற்குமுன் 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய உபரியைப் பெற்றது. அந்த நிதியாண்டில் பெறப்பட்ட உபரி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 விழுக்காடாக இருந்தது, அதாவது $10.9 பில்லியன்.

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம்வருமானம்வரி