‘தி டிரேட் டெஸ்க்’ நிறுவனத்தின் 15% ஊழியர்கள் ஆட்குறைப்பு

‘தி டிரேட் டெஸ்க்’ நிறுவனத்தின் 15% ஊழியர்கள் ஆட்குறைப்பு

2 mins read
சிங்கப்பூர்க் குழுவும் பாதிப்பு
5c1059bc-d7d8-42b8-a7c1-a169cc7230a3
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் செப்டம்பர் 4ஆம் தேதி நிறுவனத்திலிருந்து வெளியேறினர். - படம்: தி டிரேட் டெஸ்க்/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

அமெரிக்க விளம்பரத் தொழில்நுட்ப நிறுவனமான ‘தி டிரேட் டெஸ்க்’, சிங்கப்பூர் ஊழியர்கள் சிலர் உட்பட, உலகளவில் உள்ள அதன் ஊழியரணியில் 15 விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்துள்ளது.

நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான ஜெஃப் கிரீன், செப்டம்பர் 3ஆம் தேதி தமது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அது பற்றி அறிவித்தார். அந்த மின்னஞ்சல் ‘தி டிரேட் டெஸ்க்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘தி கரண்ட்’ (The Current) என்ற விளம்பரத் தொழில்நுட்பச் செய்தித் தளத்திலும் வெளியிடப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் செப்டம்பர் 4ஆம் தேதி நிறுவனத்திலிருந்து வெளியேறினர்.

“இது நாங்கள் எளிதில் எடுத்த முடிவு அல்ல; மிகவும் கடினமான ஒரு முடிவு,” என்று அவர் அந்த மின்னஞ்சலில் தெரிவித்தார். ஆட்குறைப்பு என்பது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் வழக்கமானதுதான் என்றாலும், ‘தி டிரேட் டெஸ்க்’ல் இது வழக்கமான ஒன்று அல்ல,” என்றும் அவர் கூறினார்.

‘தி டிரேட் டெஸ்க்’ நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவின் வென்சுராவில் செயல்பட்டுவருகிறது. சிங்கப்பூர், தோக்கியோ, சோல், ஜகார்த்தா, ஷென்ஜென், தைப்பே உட்பட உலகம் முழுவதும் அதற்கு அலுவலகங்கள் உள்ளன.

அந்த நிறுவனம் ஒரு சுயசேவைத் தளத்தை இயக்குகிறது. அதன்மூலம், நிறுவனங்கள் தனித்தனி இணையத்தளங்களை நேரடியாகத் தொடர்புகொள்ளத் தேவையின்றி, இணையம் முழுவதும் மின்னிலக்க விளம்பரங்களைத் தாமாகவே வாங்கி வெளியிடலாம்.

அண்மைய ஆட்குறைப்புக்கு முன்னதாக, அந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 3,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினர்.

‘தி டிரேட் டெஸ்க்’ நிறுவனத்தில் சிங்கப்பூரில் மட்டும் 140க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிவதாக ‘லிங்க்ட்இன்’ வேலைத்தளத்தின் தகவல்கள் காட்டுகின்றன.

திங்கட்கிழமை (செப்டம்பர் 7) நிலவரப்படி, ஆசிய-பசிபிக் வட்டாரத்திற்கான வர்த்தக வளர்ச்சிப் பிரிவின் மூத்த இயக்குநருக்கான பணிக்கு, சிங்கப்பூரில் காலியிடம் இருப்பதாக அந்தத் தளம் காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஆட்குறைப்புநிறுவனம்ஊழியர்கள்