அபாயத்தில் உள்ள குடும்பங்களைப் பகுப்பாய்வு செய்ய $15 மி. நிதி ஒதுக்கீடு

அபாயத்தில் உள்ள குடும்பங்களைப் பகுப்பாய்வு செய்ய $15 மி. நிதி ஒதுக்கீடு

2 mins read
‘ஏஐ’ போன்ற தொழில்நுட்பத் தீர்வுகளைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பயன்படுத்தும்
2ff63e75-c067-4d82-a1ec-8048e78c132f
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக சேவைத் துறை செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தில் முன்னேறி வருகிறது. இதனைத் தொடர்ந்து, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு புதிய தொழில்நுட்பங்களுடன் பகுப்பாய்வு செய்வதற்காக மூன்று ஆண்டுகளில் $15 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

சவால்கள் தீவிரமடைவதற்கு முன்பாக, அபாயத்தில் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களது குடும்பத்தினரை முன்கூட்டியே சென்றடைவதற்காகத் தரவுகளைப் பயன்படுத்துவதே அமைச்சின் குறிக்கோள்களில் ஒன்று என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி வியாழக்கிழமை (ஜூலை 2) கூறினார்.

சில சமூகப் பணியாளர்கள் ஏற்கெனவே ‘கேஸ்சென்ட்ரல்’ போன்ற வழக்கு மேலாண்மை அமைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதோடு, பணிப்பாய்வுகளையும் தானியக்கமாக்குகிறது.

ஜூலை 2ஆம் தேதியன்று, இதுபோன்ற தொழில்நுட்பத் தீர்வுகளை மேலும் மேம்படுத்துவதற்காக, என்சிஎஸ் மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் ஆகிய இரண்டு உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பங்காளித்துவத்தை அமைச்சு அறிவித்தது.

இந்தப் பங்காளித்துவத்தின் நோக்கம், வாடிக்கையாளர்கள் மற்றும் குடும்பங்களுக்குச் சிறந்த ஆதரவை வழங்குவது, தொழில் வல்லுநர்களுக்கு அவர்களின் பணி ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான கருவிகளை வழங்குவது, குடியிருப்பு இல்லங்கள், சமூக சேவை மையங்களில் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆகியவை ஆகும்.

புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக, சமூக சேவை அமைப்புகள், கல்வித்துறை மற்றும் பெருநிறுவனத் துறையைச் சேர்ந்த ஏறத்தாழ 1,000 பிரதிநிதிகள், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் முதலாவது பங்குதாரர் மாநாட்டில் கலந்துகொண்டனர். அங்கு இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சி புவனா விஸ்டாவில் உள்ள த ஸ்டார் தியேட்டரில் நடைபெற்றது.

உலகெங்கிலும் உள்ள சமூக சேவைத் துறையிலும் சிங்கப்பூரிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று திரு மசகோஸ் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை சிலர் ஐயத்துடனோ அல்லது அது சமூக சேவை வல்லுநர்களுக்கு மாற்றாக அமைந்துவிடும் என்ற அச்சத்துடனோ பார்க்கக்கூடும் என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

“செயற்கை நுண்ணறிவைச் சரியாகப் பயன்படுத்தினால், அது முன்னெப்போதையும் விட நாம் மேலும் முன்னோக்கிச் சென்றடையவும், விரைவாகப் பதிலளிக்கவும், குடும்பங்களுக்கு மிகவும் திறம்பட ஆதரவளிக்கவும் உதவும்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்
சமூக சேவைசெயற்கை நுண்ணறிவுபுதிய தொழில்