புவன விஸ்தா, ஹாலந்து பகுதிகளில் திருடிய இரண்டு வெளிநாட்டினருக்குத் தலா 15 மாதச் சிறை

2 mins read
d66ec6e9-7340-4067-a2b5-d3e3041a438f
ஃபெங் யுன்லாங் (இடது), ஸாங் யோங்சியாங் ஆகியோர் தலா ஒரு முறை வீடு புகுந்து திருடியதாக ஒப்புக்கொண்டனர். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புவன விஸ்தா, ஹாலந்து பகுதிகளில் உள்ள தரை வீடுகளில் அத்துமீறி நுழைந்த இரண்டு வெளிநாட்டினருக்கு தலா 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

38 வயதான ஃபெங் யுன்லாங், 52 வயதான ஸாங் யோங்சியாங் ஆகியோர் தலா ஒரு முறை வீடு புகுந்து திருடியதாக ஜூன் 24 அன்று ஒப்புக்கொண்டனர். தண்டனை விதிப்பின்போது அவர்கள் ஒவ்வொருவருக்கும் இதே போன்ற மற்றொரு குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.

ஹாலந்தின் கிரீன்லீஃப் வியூவில் உள்ள ஒரு தரை வீடு மற்றும் புவன விஸ்தா ஸெண்டர் சாலையில் உள்ள மற்றொரு தரை வீடு ஆகியவற்றில் புகுந்து திருட்டு மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறைக்கு புகார்கள் வந்ததை அடுத்து, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி சமூக வருகை அனுமதியுடன், ஃபெங்கும் ஸாங்கும் சிங்கப்பூருக்கு வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2024, டிசம்பர் 16ஆம் தேதி, இரவு சுமார் 8.50 மணியளவில், வீடு புகுந்து திருடுவதற்காக இரண்டு சீன நாட்டவர்களும் கிரீன்லீஃப் வியூவில் சுற்றித் திரிந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் டெங் யின் ஹாங் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் தரை வீட்டில் விளக்குகள் எரியவில்லை என்பதைக் கவனித்த பிறகு, அவர்கள் அதை குறிவைக்க முடிவு செய்தனர்.

கட்டுமானத்தில் இருந்த பக்கத்து வீட்டிலிருந்து ஸாங் அந்தத் தரை வீட்டிற்குள் நுழைந்தார். சம்பவ இடத்தில் தனது கைரேகைகள் பதியாமல் இருக்க, பக்கத்து வீட்டிலிருந்து எடுத்த ஒரு ஜோடி கையுறைகளை அவர் அணிந்திருந்தார்.

இதற்கிடையே, ஃபெங் வீட்டிற்கு வெளியே ஒரு கண்காணிப்பாளராகச் செயல்பட்டார்.

அந்த வீட்டில் விலையுயர்ந்த சில பொருள்களை எடுத்துக்கொண்ட ஸாங், வேறு விலையுயர்ந்த பொருள்கள் கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறி ஃபெங்கை சந்தித்தார். பின்னர் இருவரும் தங்கள் ஹோட்டலுக்குத் திரும்பினர்.

சம்பவம் நடந்தபோது வெளியில் சென்றிருந்த வீட்டு உரிமையாளர்கள், இரண்டு நாள்களுக்குப் பிறகு டிசம்பர் 18 அன்று திரும்பியவுடன் தங்கள் வீட்டில் திருட்டு நடந்துள்ளது என்பதை அறிந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதே நாளில், ஸாங்கும் ஃபெங்கும் ஸெண்டர் சாலையில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் நுழைந்து $7,000க்கும் அதிகமான மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்றனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அதே நாளில் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டனர் என்று காவல்துறையினர் முன்பு நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்