பொதுத் தேர்தலில் களமிறங்கிய 44 இளம் வேட்பாளர்களில் 15 பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.
கடந்த தேர்தலில் 40 வயதுக்கு உட்பட்ட 32 பேர் களமிறங்கிய நிலையில், அந்த எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஏறத்தாழ 15 விழுக்காட்டினர் 40 வயதுக்கும் குறைவானவர்களாக இருப்பர்.
மக்கள் செயல் கட்சி சார்பில் 40 வயதுக்கும் குறைவான 17 பேர் போட்டியிட்டனர். அவர்களில் 12 பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர். வென்றோரில் ஒன்பது பேர் முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டவர்களாவர்.
வெற்றி பெற்றோரில் வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் களமிறங்கிய கசெண்ட்ரா லீ, 33, ஆக இளையவர்.
பாட்டாளிக் கட்சியில் ஏறத்தாழ மூவரில் ஒருவர் 40 வயதுக்கும் குறைவானவராக இருந்தனர். அவர்களில் கெனத் தியோங், லூயிஸ் சுவா, அப்துல் முஹைமின் அப்துல் மாலிக் ஆகிய மூவரும் நாடாளுமன்றம் செல்கின்றனர். இவர்களில் கெனத் தியோங், அப்துல் முஹைமின் அப்துல் மாலிக் இருவரும் புதுமுகங்கள்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் 11 வேட்பாளர்களில் அரிஃபின் ஷா மட்டுமே 40 வயதுக்கும் குறைவானவர்.
மக்கள் சக்திக் கட்சி சார்பில் அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிட்ட ஹெங் ஸெங் டாவ் வேட்பாளர்களிலேயே ஆக இளையவர். அவருக்கு வயது 24.

