தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து முறை மின்சிகரெட்டுகளுடன் பிடிபட்ட 15 வயதுச் சிறுவன்மீது குற்றச்சாட்டு

1 mins read
சிங்கப்பூர் சிறுவர் இல்லத்தில் ஈராண்டுகள் தங்கவைக்க உத்தரவு
07d0c2a5-e0c8-4ee9-bf37-f822b21d8138
2024 மார்ச் 19ஆம் தேதி நெக்ஸ் கடைத்தொகுதியில் உள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் இரண்டு மின்சிகரெட்டுகளுடன் அந்தச் சிறுவன் பிடிபட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சுகாதார அறிவியல் ஆணையத்தால் ஐந்து வெவ்வேறு தருணங்களில் மின்சிகரெட்டுகளுடன் பிடிபட்ட 15 வயதுச் சிறுவன்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இளம் குற்றவாளிகள் மறுவாழ்வு மையமான சிங்கப்பூர் சிறுவர் இல்லத்தில் ஜூலை 21ஆம் தேதி முதல் 24 மாதங்கள் சிறுவனைத் தங்கவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அச்சிறுவன் 2024 மார்ச் 19ஆம் தேதி நெக்ஸ் கடைத்தொகுதியில் உள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் இரு மின்சிகரெட்டுகளுடன் பிடிபட்டான்.

2024 பிப்ரவரி முதல் அக்டோபர்வரை சின் மிங் அவென்யூ, 201 சிராங்கூன் சென்ட்ரல், பொங்கோலில் உள்ள சுமாங் வாக் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் வெற்றுத் தளம் ஆகிய இடங்களில் நான்கு வெவ்வேறு தருணங்களில் மின்சிகரெட்டுகளுடன் பிடிபட்டான்.

ஜூலை 21ஆம் தேதி நீதிமன்றத்தில் அச்சிறுவன் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சிங்கப்பூர் காவல்துறையிடமிருந்து 15 கூடுதல் குற்றச்சாட்டுகளையும் அச்சிறுவன் எதிர்நோக்கியதாக ஆணையம் வியாழக்கிழமை (ஜூலை 24) தெரிவித்தது.

மின்சிகரெட் ஒழிப்புக்கு கூடுதல் நடவடிக்கைகள்

சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் 2024 ஏப்ரலில் வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், பள்ளி வளாகத்திற்கு வெளியே மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காக ஆணையத்தால் அல்லது பிற அமலாக்க அமைப்புகளால் மாணவர்கள் பிடிபடும்போது கல்வி அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று கூறின.

ஆணையம் விதிக்கும் தண்டனைக்கு மேலதிகமாக, மின்சிகரெட் பயன்படுத்தும் மாணவர்களுக்கு எதிராகப் பள்ளிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.

பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவது அல்லது சிறுவர்களுக்குப் பிரம்படி விதிக்கப்படுவது போன்ற தண்டனைகள் இதில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்