சிராங்கூனில் உள்ள உடற்பயிற்சிக்கூடத்தில் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஜனவரி 15ஆம் தேதி, புளோக் 201 சிராங்கூன் சென்ட்ரல் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்த காவல்துறை, அன்றைய தினம் மாலை 4.15 மணியளவில் உதவிக்கான அழைப்பு தனக்கு வந்ததாகக் கூறியது.
இந்த வழக்கு கலவரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் 11 முதல் 14 வயதுடைய எட்டுப் பேர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றனர்.
கிட்டத்தட்ட ஒரு நிமிடக் காணொளியில் இந்தச் சம்பவம் பதிவானது. அக்காணொளி இணையத்தில் பரவியது.
உடற்பயிற்சிக்கூடத்தில் உள்ள உடற்பயிற்சி இயந்திரம் ஒன்றில் அமர்ந்திருந்த அந்தச் சிறுவனை, பதின்ம வயது ஆடவர் ஒருவர் முகத்தில் உதைத்தார்.
அங்கிருந்த மேலும் இரு பதின்ம வயது ஆடவர்கள் அச்சிறுவனை உதைத்தனர். தரையில் விழுந்து கிடந்த அச்சிறுவனை அந்த மூவரும் சேர்ந்து அவருடைய தலையிலும் உடலிலும் அடித்து உதைத்தனர்.
காவல்துறை அதிகாரிகள் வந்தால் உடனடியாக ஓடிவிடுமாறு காணொளியின் பின்னணியில் ஒருவர் கூறுவதைக் கேட்க முடிந்தது. அச்சிறுவனைத் தாக்கியவர்கள், அவருடைய சட்டையை அகற்றுவது பற்றி பின்னணியில் வேறொருவர் ஏதோ பேசுவதையும் கேட்க முடிந்தது.
தம் கைகளால் தலையை மறைத்துக்கொள்ள முயன்ற அச்சிறுவன் அழுவதைக் காணொளியில் கேட்க முடிந்தது.
அச்சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

