பணிப்பெண்ணுக்கு வன்கொடுமை: ஆடவருக்கு 15 ஆண்டுகள் சிறை

2 mins read
c3d8c618-d38a-4ba3-bd6f-199a667dde49
படம்: - தமிழ்முரசு

பணிப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 69 வயது டான் ஜெக் துவாங்கிற்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அவர் இந்தக் குற்றத்தை 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்தார் எனக் கூறப்பட்டது.

அவர் தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற ஆறு குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன எனச் சொல்லப்பட்டது.

டான் அந்த மாதை ஒரு பாலியல் விளையாட்டுப் பொருளாகக் கருதியுள்ளார் எனவும் அந்த மாதுக்கும் டானுக்கும் இடையிலான அதிகார வேறுபாடு காரணமாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு அந்த மாது ஆளாக்கப்பட்டார் எனவும் நீதிபதி தண்டனை விதிக்கும்போது தெரிவித்தார்.

முதலாளியான டான், அந்த 45 வயது இந்தோனீசியப் பணிப்பெண்ணை ஐந்து மாதகாலமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்பட்டது.

அந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த மாது தனது பொருள்களை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு 2021 ஏப்ரல் 11ஆம் தேதி வெளியேற முயன்றார்.

ஆனால், டானின் சகோதரர் அவரை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த காவல்துறை இது குறித்து விசாரணை மேற்கொண்டது.

அப்போது தனது முதலாளி தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அந்த மாது காவல்துறையிடம் கூறினார்.

தவறு செய்த முதலாளியைக் காவல்துறை அதே நாளில் கைது செய்தது.

டானுக்கு தண்டனை விதிக்கப்படும் போது அவரது வழக்கறிஞர் டானின் வயதைக் கருத்தில் கொண்டு குறைந்தப்பட்ச தண்டனை விதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஒருவரின் வயதைக் கொண்டு அவர் செய்த தவற்றுக்குத் தண்டனையைக் குறைக்கமுடியாது என்ற நீதிபதி, டான் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.

குறிப்புச் சொற்கள்