$150 மி. மதிப்புள்ள ஏ*ஸ்டார் ஆய்வு தொடக்கம்

$150 மி. மதிப்புள்ள ஏ*ஸ்டார் ஆய்வு தொடக்கம்

2 mins read
இளம் பருவத்தினரின் சுகாதாரத்திலும் மேம்பாட்டிலும் கவனம்
f1ab0d98-e7c2-4681-82be-b5e85def9776
கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பின்போது தங்கள் சொந்தக் கற்றல் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். - கோப்புப் படம்: கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி

சிங்கப்பூர் அறிவியல், தொழில்நுட்ப, ஆராய்ச்சி அமைப்பான ஏ*ஸ்டார், 10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் தொடர்பில் ஆய்வு நடத்த $150 மில்லியன் மதிப்பிலான புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கவுள்ளது.

அந்தத் திட்டம் ஐந்தாண்டுகள் நீடிக்கும். அந்த ஆய்வில் இளையோரின் தூக்கம், ஆரம்பகால பிள்ளைப்பருவ மேம்பாடு, மின்னிலக்க ஊடகப் பயன்பாடு ஆகியவை குறித்து ஆராயப்படவுள்ளன.

ஏ*ஸ்டார் அமைப்பு அந்தத் திட்டத்தை திங்கட்கிழமை (ஜூலை 13) அறிவித்தது. சிங்கப்பூர்ச் சூழலில் இளம் பருவத்தினரின் மேம்பாடு குறித்த ஆதாரங்களைத் திரட்டுவதற்காகக் கல்வி அமைச்சுடனும் மற்ற பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றவிருப்பதாக அது கூறியது.

அந்த ஆய்வில் ஏறக்குறைய 5,000 இளையோர் பங்கேற்கவுள்ளனர்.

மேற்கத்திய நாடுகளின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டே இளையோர் குறித்த பெரும்பாலான தற்போதைய ஆராய்ச்சிகள் அமைந்துள்ளன. ஆசியச் சமூகங்களில், கலாசார வழக்கங்கள் இளையோரின் அனுபவங்களை வடிவமைக்கின்றன. அத்தகைய சமூகங்களுக்கு, அந்த ஆராய்ச்சிகள் முழுமையாகப் பொருந்துவதில்லை என்று ஏ*ஸ்டார் மனித மேம்பாடு, ஆற்றல் கழகத்தின் (Institute for Human Development and Potential) ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

ஒரு குழந்தையின் உடலமைப்பு, மூளை, உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கான வளர்ச்சிக்கு அதன் வாழ்வின் முதல் 1,000 நாள்கள் மிக முக்கியமான காலகட்டமாகும். அதே வேளையில், இளையோர் பருவம் வாழ்க்கையின் இரண்டாவது மிக முக்கியமான காலகட்டமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இளையோரின் மனநலம், வாழ்க்கைமுறை, மின்னிலக்கப் பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், அந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக ஏ*ஸ்டார் தெரிவித்தது.

சிங்கப்பூரிலும், ஆசியாவிலும் கொள்கைகள், திட்டங்கள், ஆக்கபூர்வமான தலையீடுகள் ஆகியவற்றை வழிநடத்துவதற்கு நீண்டகால ஆதாரங்கள் இல்லாத குறைபாட்டை அந்த ஆய்வு நிவர்த்தி செய்ய முயல்வதாக அது கூறியது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இளம் பருவத்தினரின் வளர்ச்சி பற்றிய புரிதலில் இன்னும் சில இடைவெளிகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆரம்பகால வாழ்க்கை அனுபவங்களும் சமூக மாற்றங்களும் காலப்போக்கில் அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் அந்த இடைவெளிகள் தொடர்வதாக அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்