ஜனவரி முதல் ஜூலை வரை வாடகை சைக்கிள்களைச் சட்டவிரோதமாக நிறுத்தியது தொடர்பாக 15,000 புகார்கள்

ஜனவரி முதல் ஜூலை வரை வாடகை சைக்கிள்களைச் சட்டவிரோதமாக நிறுத்தியது தொடர்பாக 15,000 புகார்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Sep 2026 - 7:02 pm

2 mins read

2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து பிற இடங்களில் வாடகை சைக்கிள்களைச் சட்டவிரோதமாக நிறுத்தியது தொடர்பாக ஏறக்குறைய 15,000 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹுய் யிங் எழுப்பிய கேள்விக்குச் செப்டம்பர் 8ஆம் தேதி எழுத்துபூர்வமாகப் பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், 148,000 சம்பவங்களில் வாடகை சைக்கிள் நிறுவனங்கள் $5 கட்டணம் விதித்துள்ளதாகத் தெரிவித்தார்.

விதிகளைத் திரும்பத் திரும்ப மீறிய ஏறக்குறைய 4,800 பேருக்கு வாடகை சைக்கிள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஓராண்டில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை கண்ட இடங்களில் வாடகை சைக்கிள்களை நிறுத்துவோர், விதிகளை மீண்டும் மீண்டும் மீறுவோராகக் கருதப்படுவர்.

வாடகை சைக்கிள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், அமலாக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டதாலும் அபராதங்களும் தடைகளும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சியாவ் விளக்கினார்.

2025ல் இத்தகைய விதிமீறல்கள் குறித்து ஏறக்குறைய 12,000 புகார்கள் பெறப்பட்டன. 90,000 சம்பவங்களில் $5 அபராதம் விதிக்கப்பட்டதுடன், மீண்டும் மீண்டும் விதிமீறிய 4,800 பேருக்குத் தடையும் விதிக்கப்பட்டது.

ஜனவரி 2025 முதல் ஜூலை 2026 வரை 95 விழுக்காட்டு வாடகை சைக்கிள் பயணங்கள் ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடங்களில் நிறைவடைந்தன.

எம்ஆர்டி நிலையங்கள், பேருந்துச் சந்திப்பு நிலையங்கள் போன்ற அதிக நடமாட்டம் உள்ள போக்குவரத்து மையங்களுக்கு அருகில் வாடகை சைக்கிள்கள் சட்டவிரோதமாக நிறுத்தப்படுவது அதிகம் நடப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் பதிலளித்தது.

பயணிகளின் நடமாட்டம், பயண முறைகளைப் பொறுத்து இத்தகைய நிகழ்வுகள் மாறுபடும் என்று ஆணையம் கூறியது.

இடவசதி, தேவை, நடையர்களுக்கான வசதி, பாதுகாப்பு போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு உரிய திட்டமிடுதலுடன் வாடகை சைக்கிள் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுவதாக ஹெலோரைட் நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்