சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு 15,300 மின்னூட்ட முனைகள்

2 mins read
65b4edfb-bd3d-4a10-a052-a01dcc53fb2e
உட்லாண்ட்ஸ் சிவிக் சென்டரில் உள்ள கார் நிறுத்துமிடத்தில்  வேகமாக மின்னூட்டம் செய்யும் முனை நிறுவப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களுக்கு 60,000க்கும் மேற்பட்ட மின்னூட்ட முனைகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த இலக்கை நோக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூரில் தற்போது 15,300க்கும் மேற்பட்ட மின்னூட்ட முனைகள் உள்ளன. 2030ஆம் ஆண்டு இலக்கில் கால்வாசி நிறைவடைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்த மின்னூட்ட முனைகளைவிட செப்டம்பர் மாதம் 1,500 மின்னூட்ட முனைகளை நிறுவப்பட்டுள்ளன.

இனிவரும் மாதங்களில் தீவு முழுவதும் கட்டங்கட்டமாக மின்னூட்ட முனைகள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலப்போக்குவரத்து ஆணையத்தின் தரவுகளின்படி 15,300 மின்னூட்ட முனைகளில் கிட்டத்தட்ட 7,100 மின்னூட்ட முனைகள் பொது இடங்களில் உள்ளன.

மற்றவை கூட்டுரிமை வீடுகள் உள்ளிட்ட தனியார் இடங்களில் உள்ளன.

பொது இடங்களில் உள்ள பெரும்பாலான மின்னூட்ட முனைகள் மெதுவாக மின்னூட்டம் செய்பவை. இரவு முழுவதும் மின்னூட்டம் செய்தால்தான் வாகனத்தின் மின்கலன் 100 விழுக்காடு மின்னூட்ட அளவை எட்டும்.

இதனால் பொது இடங்களில் உள்ள மின்னூட்ட முனைகளில் பலவற்றை வேகமாக மின்னூட்டம் செய்யும் இயந்திரங்களாக மாற்றவும் நிலப்போக்குவரத்து ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது.

வேகமாக மின்னூட்டம் செய்யும் முனைகளில் ஒரு மணி நேரத்தில் வாகனத்தின் மின்கலன் 20 விழுக்காட்டில் இருந்து 80 விழுக்காட்டுக்கு மாறும்.

திங்கட்கிழமையன்று (நவம்பர் 4) பொது இடங்களில் வேகமாக மின்னூட்டம் செய்யும் முனைகள் பல நிறுவப்பட்டன. உட்லண்ட்ஸ் சிவிக் சென்டரில் உள்ள கார் நிறுத்துமிடத்திலும் அவை நிறுவப்பட்டிருந்தன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின்கீழ் உள்ள 8 கார் நிறுத்துமிடங்களில் வேகமாக மின்னூட்டம் செய்யும் முனைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இவி-எலக்ட்ரிக் (EV-Electric) தெரிவித்தது.

நிலப்போக்குவரத்து ஆணையத்திற்கு மின்னூட்ட முனைகளை நிறுவ இவி-எலக்ட்ரிக் உதவுகிறது.

குறிப்புச் சொற்கள்