தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய சேம நிதி வீடமைப்பு மானியம்; 49,500 குடும்பங்களுக்கு $1.56 பி. வழங்கப்பட்டது

2 mins read
83f17480-01e4-4e6b-a5d7-0f1e49ebf41c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) கடந்த ஆண்டு 18,000 குடும்பங்களுக்கு $564 மில்லியன் பெறுமானமுள்ள மேம்படுத்தப்பட்ட மத்திய சேம நிதி வீடமைப்பு மானியங்களை வழங்கியது.

2019ல் இந்த மானியம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மொத்தம் $1.56 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

மானியம் குறித்து நேற்று தகவல் வெளியிட்ட வீவக, 2019 செப்டம்பரில் இருந்து தங்கள் முதல் வீட்டை வாங்கிய 49,500 குடும்பங்கள் இந்த மானியத்தின் மூலம் பலனடைந்து உள்ளதாகக் கூறியது.

மானியத்தைப் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கையும் மானியத்தின் அளவும் 2019லிருந்து ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துள்ளதாக வீவக தெரிவித்தது. விற்பனைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கையும் மானியத்துக்கு தகுதிபெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பது இதற்குக் காரணம்.

தங்கள் முதல் புதிய அல்லது மறுவிற்பனை வீட்டை வாங்கும் குறைந்த, நடுத்தர வருமான குடும்பங்களுக்கு $80,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

2019 செப்டம்பரில் இருந்து டிசம்பர் வரை ஏறத்தாழ 1,500 குடும்பங்கள் $42 மில்லியன் பெறுமானமுள்ள மானியங்களைப் பெற்றுக்கொண்டன.

2020ல் 14,000 குடும்பங்கள் $454 மில்லியன் மதிப்பிலான மானியங்களைப் பெற்றுக்கொண்டனர். 2021ல் 16,000 குடும்பங்கள் $499 மில்லியன் மதிப்புடைய மானியங்களைப் பெற்றுக்கொண்டன.

"வலுவான தேவைக்கு மத்தியில் வீவக வீட்டு விலை கட்டுப்படியாக இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் வழங்கிவரும் ஆதரவின் ஒரு பகுதியாக இந்த மானியம் அமைகிறது," என்று வீவக கூறியது.

மானியத்தைப் பெற்றுக்கொண்ட 49,500 குடும்பங்களில் 28,400 குடும்பங்கள் வீவகவிடம் இருந்து வீட்டை வாங்கின. தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடு (பிடிஓ), எஞ்சிய வீட்டு விற்பனை, பொது முன்பதிவு மூலம் அவை வீட்டை வாங்கின.

எஞ்சிய 21,100 குடும்பங்கள் மறுவிற்பனை வீட்டை வாங்கின.

பிடிஓ வீடுகளுக்கான மானியம், சந்தைத் தள்ளுபடியைச் சேர்க்கையில், கடந்த ஆண்டு முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் புதிய வீடு வாங்கியவர்களில் 90 விழுக்காட்டினர், வீட்டுக் கடனைச் செலுத்த தங்கள் மாத வருமானத்தில் கால்வாசி அல்லது அதற்கும் குறைவான தொகையைப் பயன்படுத்துவதாக வீவக தெரிவித்தது.

முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் புதிய வீடு வாங்கியோரிடையே இந்த விகிதம் 80 விழுக்காட்டிற்கும் மேலாக உள்ளது.

"அதாவது, குறைந்த கைக்காசு அல்லது கைக்காசு தேவையின்றி, மத்திய சேம நிதி பங்களிப்பைப் பயன்படுத்தி அவர்களால் வீட்டு கடனைச் செலுத்த முடிகிறது," என்றது வீவக.

மறுவிற்பனை வீடு வாங்குவோர் நெருக்கம் ஊக்குவிக்கும் வீடமைப்பு மானியத்தைப் பயன்படுத்தலாம். தங்கள் பெற்றோர் அல்லது பிள்ளைகளுடன் சேர்ந்து வசிக்க அல்லது அவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்திற்குள் மறுவிற்பனை வீடு வாங்கும் குடும்பங்களுக்கு $30,000 வரையும் ஒற்றையருக்கு $15,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது.

ஈரறை முதல் நாலறை வரையிலான மறுவிற்பனை வீடு வாங்கும் குடும்பங்கள் மசேநி வீடமைப்பு மானியத்திலிருந்தும் $80,000 வரை பெறலாம். ஐந்தறை அல்லது அதற்கும் பெரிய வீடு வாங்குவோர் $50,000 வரை மானியம் பெறலாம்.

குறிப்புச் சொற்கள்
மத்திய சேம நிதிமானியம்