மலேசியாவில் பணிபுரிந்துவந்த தம் தாயாருடன் வசித்திருந்த 15 வயது அலெஸான்ட்ரியா வென் பூன்ஸ்ட்ரா நசுதியோன், சிங்கப்பூருக்குத் திரும்பியபோது இங்குள்ள பள்ளி ஒன்றில் மற்ற மாணவர்களுடன் பழகச் சிரமப்பட்டார்.
இணையத்தில் பகடிவதைக்கு ஆளான அந்த இளம்பெண்ணுக்குப் பள்ளி நண்பர்கள் இல்லை.
மனநல ஆலோசனையை நாட விரும்பிய குமாரி அலெஸான்ட்ரியா, செப்டம்பர் 2024ல் இளையர் நல அமைப்பான ‘இம்பார்ட்’ பற்றிக் கேள்விப்பட்டார்.
‘இம்பார்ட்’ நடத்திய கேலிஸ்தெனிக்ஸ் எனப்படும் உடலுரப் பயிற்சிகளிலும் நடனத் திட்டங்களிலும் அவர் சேர்ந்தார். மே 10ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் ஹிப் ஹாப் நடனத்தை மேடையில் ஆடினார்.
இவ்வாறு, ‘இம்பார்ட்’ அமைப்பின் சமூகத் திட்டங்களில் கலந்துகொண்டு முடித்த 156 பேரில் அலெஸான்ட்ரியாவும் ஒருவர். தெலுக் ஆயரிலுள்ள ‘கிளாஸ் டோம்’ சமூக மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
ஏட்டுக்கல்வியைத் தாண்டிய வெற்றிகளை இளையரிடையே அங்கீகரிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று ‘இம்பார்ட்’ நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான நரசிம்மன் திவாசிகமணி தெரிவித்தார்.
2017ல் நிறுவப்பட்ட ‘இம்பார்ட்’, பிரச்சினைகளை எதிர்நோக்கும் இளையர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. துணைப்பாட வகுப்புகள், ஆர்வலர் குழுக்கள், திறன்களைக் கற்றுத்தரும் திட்டங்கள் ஆகியவற்றை இம்பாரட் இளையர்களுக்கு வழங்குகிறது.
தேசிய வளர்ச்சி அமைச்சரும் சமூகச் சேவை ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பேற்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ, விருதுகளை வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
“இன்றைய அதிவேக, மின்னிலக்கமயமான உலகில் இளையர்கள் பிறருடன் இணக்கம் இல்லாத நிலையைக் கூடுதலாக உணர்வது குறித்த கலந்துரையாடல்கள் அண்மை ஆண்டுகளில் பெருகி வருகின்றன,” என்று அவர் கூறினார்.
கடினமான சூழலை எதிர்நோக்கும் இளையர்களுக்கு நல்ல உறவுகள் போதவில்லை என்றால் தங்கள் பாரம் கூடுதலாக கனப்பது போல அவர்கள் உணரக்கூடும் என்று திரு லீ கூறினார்.
இம்பார்டின் திட்டங்களுக்கு நிதியாதரவு வழங்க சிங்கப்பூர் அரசு நிதியகமான ‘ஜிஐசி’ முன்வருவதாகவும் திரு லீ அறிவித்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ‘ஜிஐசி’, இம்பார்ட்டுக்கு ஆண்டுக்கு 150,000 வெள்ளி வழங்கவுள்ளது. அத்துடன், ‘ஜிஐசி’ நிறுவன பணியாளர்களும் இளையர்களுக்கு வழிகாட்டி அவர்களுடன் பல்வேறு நடவடிக்கைகளிலும் பழகவுள்ளனர்.