ஏற்றுமதிக்கு வைத்திருந்த மது போத்தல்களுக்கான வரியை செலுத்தாமல் இருக்க அவற்றில் சிலவற்றை நீக்கி குறைந்த கட்டணத்திலான பியர் போத்தல்களை வைத்த இருவரின் வரி ஏய்ப்புத் திட்டம் அம்பலமானது.
சில்லறை மது விற்பனையாளரும் சேமிப்புக் கிடங்கு நடத்துனருமான ஜேக் லாம் என்ற 59 வயது ஆடவர் உள்ளூர் வரி ஏய்ப்பு செய்ய எண்ணி, ஏற்றுமதிக்காக வைத்திருந்த மது போத்தல்களை இரு கொள்கலன்களில் இருந்து எடுத்துக்கொண்டனர். அவற்றுக்கு பதிலாக பியர் வகை மதுபானங்களை மாற்றிவைத்து அவற்றில் ஏற்றுமதிக்கான முத்திரைகளை பதித்தனர்.
அவ்விருவரும் ஏற்றுமதி செய்யவிருந்த மது போத்தல்களை ஜூரோங்கில் உள்ள தங்கள் சேமிப்புக் கிடங்கில் மறைத்து வைக்க திட்டம் தீட்டினர்.
பின்னர் ஜேக் லாம், டியோ இ மெங் என்ற தமது சேமிப்புக் கிடங்கு மேலாளரை கப்பல் கொள்கலன்களிலிருந்து எடுத்த மது போத்தல்களுக்குப் பதிலாக பியர் போத்தல்களைக் கொண்டு நிரப்பச் சொன்னார். பியர் போத்தல்களுக்கு குறைவான வரி விதிக்கப்படுகிறது.
இவ்வாறு கொள்கலன்களில் இருந்து எடுத்து வைக்கப்பட்ட 15,800 மது போத்தல்களை உள்ளூரில் விற்க அவ்விருவரும் முடிவு செய்தனர். இப்படிச் செய்வதன் மூலம் $250,000 அளவு சுங்க வரியை அவர்கள் மிச்சப்படுத்த எண்ணினர். இதில் பிடிபட்ட இருவரும் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இம்மாதம் 19ஆம் தேதி லாம், டியோ இருவரும் மோசடியாக வரி ஏய்ப்பு செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
லாமுக்கு $1,350,000 அபராதமும் டியோவுக்கு $1,050,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அவர்கள் மீதான மேலும் 9 வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகள்,12 பொருள், சேவை வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகள், சுங்கத் துறை கட்டுப்பாட்டிலிருந்து பொருள்களை சட்டவிரோதமாக வேறு இடத்திற்கு எடுத்துச் சென்ற இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.