சூடு, உதை: பிள்ளைகளைக் காயப்படுத்திய தந்தைக்குச் சிறை

1 mins read
53d7fa56-aadc-486c-8d13-7f9d9543e074
பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த வயதினர் என்பதால் அவர்களின் தந்தை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. - கோப்புப் படம்: ஊடகம்

ஆடவர் ஒருவர் தமது மகனின் பிட்டத்தில் சூடான உலோகக் கரண்டியால் சூடு வைத்தார்; தமது மகளின் கழுத்து எலும்பு முறியும் அளவுக்கு அவரின் தோளில் உதைத்தார்.

அந்தக் குற்றங்களுக்காக அந்த ஆடவருக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) 16 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள். குற்றச்செயல்கள் நிகழ்ந்தபோது மகனுக்கு 11 வயது, மகளுக்கு 14 வயது.

இருவரும் சிறுவயதினர் என்பதால் அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, தண்டிக்கப்பட்ட தந்தை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

2019ஆம் ஆண்டு ஒருநாள், பள்ளி தொடர்பான பிரச்சினைகளால் அதிருப்தி அடைந்த அந்த 41 வயது ஆடவர், உலோகக் கரண்டியை அடுப்பில் வைத்து சூடாக்கினார். பின்னர் கரண்டியை அவர் தம் மகனின் பிட்டத்தில் வைத்ததில் தீப்புண்ணும் பின்னர் தழும்பும் ஏற்பட்டன.

2022 ஜூலை மாதம் மகள் தொடர்பான ஒரு பிரச்சினையின்போது, தரையில் உட்கார்ந்து இருந்த அச்சிறுமியின் தோளில் அந்தத் தந்தை உதைத்தார். ஒரு வாரமாகியும் வேதனை குறையாததால் அந்தச் சிறுமியை ஆடவரும் அவரது மனைவியும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றர். சிறுமியின் கழுத்து எலும்பு முறிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

2022 ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிறுவன் சிக்கியபோது அவரது தந்தையின் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்