முறையான ஆவணங்கள் இல்லாத 16 மோட்டார்சைக்கிளோட்டிகள் கைது

முறையான ஆவணங்கள் இல்லாத 16 மோட்டார்சைக்கிளோட்டிகள் கைது

1 mins read
6bd119fb-46be-4ffc-86c9-72cb0a808c22
துவாஸ் சோதனைச்சாவடியில் ஏற்கெனவே இவ்வாண்டு மே 16ஆம் தேதி போக்குவரத்துக் காவல்துறையினர் அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டு 25 மோட்டார்சைக்கிளோட்டிகளைப் பிடித்தனர். - படம்: ஷின்மின்

செல்லுபடியாகும் உரிமமின்றி மற்றும் காப்புறுதியின்றி வாகனம் ஓட்டியதற்காக 16 மோட்டார்சைக்கிளோட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்டோபர் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதானவர்கள் 21 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். குற்றம் புரியும் மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கு எதிராகப் போக்குவரத்துக் காவல்துறையினர் துவாஸ் சோதனைச்சாவடியில் செப்டம்பர் 26ஆம் தேதி நடத்திய சோதனை நடவடிக்கையில் இந்த 16 பேரும் சிக்கினர்.

சோதனைக்காக நிறுத்தப்பட்ட சுமார் 350 மோட்டார்சைக்கிளோட்டிகளில் இவர்கள் அடங்குவர்.

முறையான உரிமமின்றி வாகனம் ஓட்டுவதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் $10,000 வரையிலான அபராதம், மூவாண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பலமுறை குற்றம் புரிவோருக்கு $20,000 வரை அபராதம், ஆறாண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வாகனம் பறிமுதல் செய்யப்படும் சாத்தியமும் உண்டு.

காப்புறுதித் திட்டத்தின்கீழ் இல்லாத மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால், $1,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வெளிநாட்டில் பதிவான வாகனங்களை ஓட்டுவோர் உட்பட, சிங்கப்பூருக்குள் வரும் அனைத்து மோட்டார் வாகனமோட்டிகளும் சிங்கப்பூரின் போக்குவரத்துச் சட்டங்களுக்கு உட்பட வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மோட்டார்சைக்கிளோட்டிகளும் அவர்களுடன் பயணம் செய்வோரும் எளிதில் சாலைகளில் காயமடைய வாய்ப்புள்ளதால் பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பதன் மூலம் அனைத்துச் சாலைப் பயனர்களும் தங்களின் பங்கை ஆற்றலாம் என்று போக்குவரத்துக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்