கேலாங் சாலையில் இருக்கும் கேளிக்கை விடுதியில் பாதுகாவலராகப் பணிபுரிந்த 55 வயது லீ ஹேங் வோங், ஆடவர் ஒருவரின் தொடைப் பகுதியில் இருமுறை கத்தியால் குத்தினார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சீன நாட்டவரான சி வெய் ஃபெங் மருத்துவமனையில் மாண்டார்.
2010ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த இக்கொலைக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) தண்டனை வழங்கப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட நோக்கமில்லா மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டை லீ ஒப்புக்கொண்டதால், அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சம்பவத்தன்று சி, மதுபோதையில் கேளிக்கை விடுதியில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்துகொண்டார்.
இருமுறை நடன மேடைக்குச் சென்ற அவர், மற்ற வாடிக்கையாளர்களை மது அருந்தும் சவாலுக்கு அழைத்தார்.
மற்ற வாடிக்கையாளர்களுடன் சண்டையிட்டதையடுத்து, கேளிக்கை விடுதியைவிட்டு சி வெளியேற்றப்பட்டார்.
ஆனால், அவர் மீண்டும் அந்த இடத்திற்கு வந்து மற்ற வாடிக்கையாளர்களுடன் விடுதி படிக்கட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த லீ, சண்டையைத் தடுப்பதற்காக இருவரில் ஒருவரை எட்டி உதைத்தார். இதனால், நிலைதடுமாறிய சி படிக்கட்டில் உருண்டு கீழே விழுந்தார்.
அவர் எழுந்து வந்து லீயுடன் சண்டையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த லீ, அவரைக் கத்தியால் குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சியை மற்ற வாடிக்கையாளர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
சி மாண்டது தெரிந்ததும் லீ சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குத் தப்பிச் சென்றார்.
அதற்கு 12 ஆண்டுகள் கழித்து லீ மலேசியக் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
அவரைக் கைதுசெய்த மலேசியக் காவல்துறை, இரண்டு நாள்களுக்குப்பின் அவரைச் சிங்கப்பூர்க் காவல்துறையிடம் ஒப்படைத்தது.
கைது செய்தபோது அவர்மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லீ, அந்தக் கேளிக்கை விடுதியின் மேலாளராகவும் இருந்தார்.


