சிங்கப்பூரர்களுக்கு $165 மி. மெடிஃபண்ட் உதவி

2 mins read
f87f1a6e-c610-4d7e-9e02-00a8bfe5fc02
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்களுக்கு மெடிஃபண்ட் மருத்துவ நிதியிலிருந்து கடந்த நிதியாண்டில் மொத்தம் 165.1 மில்லியன் வெள்ளி உதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தொகை, முந்தைய ஆண்டில் வழங்கப்பட்டதைவிட 9.1 மில்லியன் வெள்ளி அதிகமாகும்.

மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த உதவி தேவைப்படுவோருக்கு அந்நிதியிலிருந்து உதவி வழங்கப்படுகிறது. இவ்வாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி கடந்த நிதியாண்டு நிறைவடைந்தது.

ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் மெடிஃபண்ட் நிதியிலிருந்து வழங்கப்படும் உதவித்தொகை அதிகரித்திருப்பது கடந்த மூவாண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

2021 நிதியாண்டில் 164.1 மில்லியன் மெடிஃபண்ட் நிதியுதவி வழங்கப்பட்டது. 2022 நிதியாண்டில் அத்தொகை 156.3 மில்லியன் வெள்ளியாகவும் 2023ல் 156 மில்லியன் வெள்ளியாகவும் பதிவானது.

அரசாங்கச் சலுகைகள், காப்புறுதித் திட்டங்கள், மெடிசேவ் ஆகியவற்றின் மூலம் வரும் ஆதரவையும் தாண்டி மருத்துவக் கட்டணம் செலுத்த கூடுதல் உதவி தேவைப்படுவோருக்கு மெடிஃபண்ட் கைகொடுக்கிறது.

பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள், இடைக்கால மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு நிலையங்கள் (ஐஎல்டிசி) என இருவகை சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களிலும் நோயாளிகளுக்குக் கூடுதல் உதவி வழங்கப்பட்டதையடுத்து மெடிஃபண்ட் நிதியாதரவும் அதிகரித்தது.

பொது மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள் போன்ற பொது சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் நோயாளிகளுக்கு 119 மில்லியன் வெள்ளி உதவி வழங்கப்பட்டது. இத்தொகை, முந்தைய ஆண்டில் வழங்கப்பட்டதைவிட ஒரு மில்லியன் வெள்ளி அதிகமாகும். கடந்த மூவாண்டுகளில் இத்தொகை அதிகரிக்கப்பட்டது இதுவே முதல்முறை.

சமூக மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள் போன்ற ஐஎல்டிசி நிலையங்களில் நோயாளிகளுக்கு மொத்தம் 46 மில்லியன் வெள்ளி உதவி வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை, முந்தைய ஆண்டு வழங்கப்பட்டதைவிட 21.4 விழுக்காடு அதிகமாகும்.

கடந்த மூவாண்டுகளாகவே ஐஎல்டிசி நோயாளிகளுக்கான மெடிஃபண்ட் நிதி ஆதரவு அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது.

மெடிஃபண்ட், அண்மை ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, மூத்தோருக்கென உதவி வழங்கும் நோக்கில் 2007ல் டெடிஃபண்ட் சில்வர் திட்டமும் உதவி தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்குக் கைகொடுக்க 2013ல் மெடிஃபண்ட் ஜூனியர் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்