தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தானியக்க வாகனச் சேவையை வழிநடத்த 17 பேர் அடங்கிய குழு

2 mins read
f06325e6-aacb-422f-8193-93c84b0017a5
சிங்கப்பூரில் இவ்வாண்டு இறுதிக்குள் தானியக்கச் சிற்றுந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் திட்டம் உள்ளது. - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூரில் ஓட்டுநரில்லாத வாகனங்களைப் படிப்படியாக அறிமுகம் செய்வதற்கான பணிகளை வழிநடத்திச் செல்ல 17 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தலைமையிலான அந்தக் குழுவில் தொழில்துறை, கல்வித்துறை, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தைப் பிரதிநிதிப்போர் அடங்கி உள்ளனர்.

சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து முறையில் தானியக்க வாகனங்களைப் பாதுகாப்பான முறையில் ஒருங்கிணைப்பதை அந்தக் குழு உறுதிசெய்யும்.

அத்துடன், வேலை வாய்ப்புகளையும் குடியிருப்பாளர்களுக்கான பயண இணைப்புகளை மேம்படுத்துவதிலும் அது கவனம் செலுத்தும்.

மொத்தம் நான்கு பணிக்குழுக்களின் முயற்சிகளை அந்தக் குழு ஒருங்கிணைக்கும்.

போக்குவரத்து அமைச்சு வியாழக்கிழமை (ஜூலை 31) வெளியிட்ட தனது அறிக்கையில் இந்த விவரங்களைக் குறிப்பிட்டு உள்ளது.

அவற்றில் ஒரு பணிக்குழு, குடியிருப்பாளர்களின் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு தானியக்க வாகனங்களை விரைவில் அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தும்.

இரண்டாவது குழு, ஓட்டுநரில்லாத வாகனம் தொடர்பான தொழில்நுட்பத்துக்குப் பொறுப்பேற்பதையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவைப்படும் விதிகள் மற்றும் அமலாக்கத்தைக் கவனித்துக்கொள்ளும். 

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை விவகாரங்களில் மற்றொரு குழு கவனம் செலுத்தும். நான்காம் குழு, தானியக்க வாகனங்களுக்கான தரவுக் கொள்கை மற்றும் வலுவான இணையப் பாதுகாப்பை உருவாக்கத் தேவைப்படும் தொழில்நுட்பங்களைக் கவனிக்கும்.

புதிய குழு தொடர்பாக திரு சியாவ் தமது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

எல்லாத் தரப்பினரின் கண்ணோட்டங்களையும் உள்ளடக்கியதாக தானியக்க வாகனப் பயன்பாடு இருக்கும் வகையிலான ஆலோசனையை குழு தமக்கு வழங்கும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தானியக்க சிற்றுந்துகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் பயணச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அச்சேவையை பொங்கோலில் தொடங்க உள்ளதாகவும் கடந்த ஜூன் மாதம் திரு சியாவ் தெரிவித்து இருந்தார்.

தானியக்க வாகனச் சேவை கட்டம் கட்டமாக அறிமுகம் காணும். தொடக்கமாக, குடியிருப்பாளர்களும் சாலைகளைப் பயன்படுத்துவோரும் தங்களுக்கு ஏதுவானதாகக் கருதும் வரை அந்த வாகனங்கள் பயணிகளை ஏற்கமாட்டா.

பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வாகனங்களில் இருப்பார்கள். தேவை ஏற்படும்போது அவர்கள் செயலில் இறங்குவார்கள். காலப்போக்கில் அவர்களுக்கான தேவை இருக்காது.

குறிப்புச் சொற்கள்