தாக்குதல்களிலிருந்து கடலடித் தொலைத்தொடர்பு, எரிசக்தி வடங்களைப் (cables) பாதுகாக்கும் நோக்கில், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகள் கடலடி முக்கிய உள்கட்டமைப்பைப் பாதுகாக்கக் கைகோத்துள்ளன.
சிங்கப்பூரில் தற்போது நடைபெற்றுவரும் 23வது ஷங்ரிலா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக மே 30ல், ‘கைட்’ எனப்படும் கடலடி உள்கட்டமைப்புப் பாதுகாப்புப் பரிமாற்றங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைக் கட்டமைப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
பாதுகாப்புச் சம்பவங்கள் குறித்த முன்னெச்சரிக்கைகளுக்கு ஆதரவாகத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள இந்தக் கட்டமைப்பு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பத்தின்பேரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்புக்குச் சட்டபூர்வமான அல்லது நிதி சார்ந்த கட்டுப்பாடுகள் இல்லை.
சிறந்த நடைமுறைகளையும் தொழில்நுட்ப அறிவையும் பகிர்ந்துகொள்ளத் தளமாகச் செயல்படவுள்ள இந்தக் கூட்டணி, அவசரகாலச் சம்பவங்களையும் நெருக்கடிகளையும் சமாளிக்கும் திறனை மேம்படுத்தக்கூடும்.
உலக நாடுகளின் பன்னாட்டு இணைப்புக்கும் பொருளியல் வளர்ச்சிக்கும் கடலடி முக்கிய உள்கட்டமைப்பு அமைப்புகளும் தொடர்புடைய கூறுகளும் அவசியமானவை.
அனைத்துலகத் தகவல் தொடர்புக் கட்டமைப்புகள் கடலடித் தொலைத்தொடர்பு வடங்களைச் சார்ந்துள்ளன. 95 விழுக்காட்டுக்கும் மேலான இணைய, தரவுப் போக்குவரத்து, பெருங்கடல்களுக்கு அடியிலுள்ள இந்த வடங்கள் வழியாகவே செல்கிறது.
அண்மையில் கடலடித் தொலைத்தொடர்பு, எரிசக்தி வடங்கள், குழாய்கள் ஆகியவை பழுதாகும் சம்பவங்கள், கடலடி முக்கிய உள்கட்டமைப்பின் குறைகளை உணர்த்தியுள்ளதாகச் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு (MINDEF) தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும் அதிகார வரம்புகளிலும் சட்டச் செயலாக்கத்திலும் சவால்கள் உள்ளன.
அத்துடன், கடல் எல்லைகளுக்கு வெளியே எழும் பிரச்சினைகளைக் கையாளுவதில் உள்ள சிரமங்களையும் இத்தகைய சம்பவங்கள் காட்டுகின்றன.
2025ல் சீனக் கடலோடிகள் கொண்ட கப்பல்களுடன் தொடர்புடைய, தைவானில் வடங்கள் துண்டிக்கப்பட்ட முக்கியச் சம்பவங்களும் அண்மையில் நிகழ்ந்துள்ளன.
‘கைட்’ கட்டமைப்பில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, புருணை, எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, லாட்வியா, லித்துவேனியா, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பீன்ஸ், கத்தார், ஸ்வீடன், தாய்லாந்து பிரிட்டன் ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
பாதுகாப்பான, நம்பகமான, மீள்திறன்மிக்க கடலடி முக்கிய உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும், அச்சுறுத்தல் சம்பவங்களைக் கையாள்வதில் பன்னாட்டு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் பலதரப்பினர் கொண்டுள்ள கவனத்தை வரவேற்பதாகச் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

