குடிமைத் தற்காப்புப் பணியாளர்கள் தவறாக நடத்தப்பட்டதாக 17 புகார்கள்

குடிமைத் தற்காப்புப் பணியாளர்கள் தவறாக நடத்தப்பட்டதாக 17 புகார்கள்

2 mins read
8176dd7d-6964-4c14-9b15-7b685bf9a35a
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பு வாகனம் ஒன்று. - கோப்புப் படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை / ஃபேஸ்புக்
Google News Preferred Icon

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) பணியாளர்கள் தவறாக நடத்தப்பட்டதாக இவ்வாண்டு இதுவரை 17 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்ற செயல்கள், முன்களப் பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது இடையூறு விளைவிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நினைவூட்டியது.

மூவாண்டுகளில் 120 புகார்கள்

கடந்த மூவாண்டுகளில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முன்களப் பணியாளர்கள் தவறாக நடத்தப்பட்டதாகக் கிட்டத்தட்ட 120 புகார்கள் கொடுக்கப்பட்டன.

அவற்றில் இவ்வாண்டு இதுவரை பதிவாகியுள்ள 17 புகார்களும் அடங்கும்.

அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில், மருத்துவ உதவி அளித்துக்கொண்டிருந்த மருத்துவ உதவியாளரை ஒருவர் தகாத வார்த்தைகளாலும் கருத்துகளாலும் இழிவுபடுத்தியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

அந்நபரை அமைதிப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டபோதும் அவர் தொடர்ந்து தவறாக நடந்துகொண்டதாகப் படை குறிப்பிட்டது.

அந்நபருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் 11 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வேண்டுகோள்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சென்ற ஆண்டு தினமும் கிட்டத்தட்ட 700 அவசர அழைப்புகளைக் கையாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒவ்வோர் அவசர அழைப்பும் எங்களுக்கு முக்கியம். எங்களால் முடிந்தவரை பொதுமக்களுக்கு ஆகச் சிறந்த வகையில் உதவிக்கரம் நீட்டுவோம்.

“அதேவேளை, உடல் அல்லது வார்த்தைகள் மூலம் தவறாக நடத்தப்படும்போது முன்களப் பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்வதில் இடையூறுகள் ஏற்படும்,” என்று குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

தங்களின் முன்களப் பணியாளர்கள் தவறாக நடத்தப்படுவதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சகித்துக்கொள்ளாது என்றும் அத்தகைய செயல்கள் நிகழ்ந்தால் காவல்துறையிடம் புகாரளிக்கப்படும் என்றும் படை அதன் பதிவில் சுட்டியது.

மேலும் அது, “உயிர்களையும் கட்டடங்களையும் பாதுகாக்கும் பணிகளில் நமது முன்களப் பணியாளர்களுடன் துணை நில்லுங்கள்,” என்றும் கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைநடத்தைபுகார்காவல்துறை