2025 முற்பாதியில் 17 பேர் வேலையிடத்தில் உயிரிழப்பு

2 mins read
98edd4aa-65bd-476b-9f1f-af50eee72d76
இவ்வாண்டின் முற்பாதியில் 17 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு முற்பாதியில் 17 பேர் வேலையிடத்தில் காயமடைந்து உயிரிழந்தனர்.

கடந்த 2024 முற்பாதியில் வேலையிட விபத்துகளில் 19 பேர் உயிரிழந்தனர். சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் வேலையிட உயிரிழப்புகளுக்கு வாகன விபத்துகள் முக்கியக் காரணமாக இருந்தன.

அத்துடன், உயரமான இடங்களிலிருந்து விழுதல், நகரும் பொருள்களால் தாக்கப்படுதல் போன்றவை உயிரிழப்புக்கான இதர காரணங்கள் என மனிதவள அமைச்சு தெரிவித்தது.

இவ்வாண்டு ஜனவரி - ஜூன் காலகட்டத்தில் கட்டுமானத் துறையில் நேர்ந்த பணியிட விபத்துகளில் ஆக அதிகமாக ஏழு பேர் உயிரிழந்தனர்.

அதுபோல, கட்டுமானத் துறையிலும் உற்பத்தித் துறையிலும்தான் அதிகமானோர் வேலையிட விபத்து காரணமாக கடுமையாகக் காயமடைந்தனர். ஆயினும், கடந்த 2024 முற்பாதியை ஒப்புநோக்க, அத்துறைகளில் நிலைமை மேம்பட்டுள்ளது.

குறிப்பாக, உற்பத்தித் துறை உலோகத் தொழில்துறைப் பிரிவில் 2024 முற்பாதியில் 24 பேர் கடுமையாகக் காயமுற்ற நிலையில், இவ்வாண்டு முற்பாதியில் அது 17ஆகக் குறைந்துள்ளது.

இதற்குப் பல நிறுவனங்கள் அடங்கிய பணிக்குழுவும், நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுமே முக்கியக் காரணம் என அமைச்சு குறிப்பிட்டது.

கட்டுமானத் துறையில் பெரிய அளவிலான வேலைகளின்போதும் கட்டுமானத் தளங்களிலும் காயமடைவது குறைந்துள்ளது.

சிங்கப்பூரின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் செயல்பாடுகள் இவ்வாண்டின் முற்பாதியில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பாக, பணியிடத்தில் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பில் 2028ஆம் ஆண்டிற்கான இலக்கைவிட குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் வேலையிட உயிரிழப்புகளுக்கு வாகன விபத்துகள் முக்கியக் காரணமாக இருந்ததாகக் கூறப்பட்டது.
சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் வேலையிட உயிரிழப்புகளுக்கு வாகன விபத்துகள் முக்கியக் காரணமாக இருந்ததாகக் கூறப்பட்டது. - வரைகலை: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தமிழில்: பிரசாந்தி

இவ்வாண்டு முற்பாதியில் நேர்ந்த பெரிய காயங்களில் ஏறத்தாழ 40 விழுக்காடு, வழுக்கி, இடறிக் கீழே விழுந்ததால் ஏற்பட்டவை.

இந்தக் காலகட்டத்தில், அதிக அபாயம் உள்ள துறைகளில் மனிதவள அமைச்சு 3,000க்கும் அதிகமான பணியிடப் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்டது.

அந்த ஆய்வுகளில் வாகனப் பாதுகாப்பு, வழுக்கி, இடறி விழுவதைத் தடுத்தல், இயந்திரப் பாதுகாப்பு, உயரமான இடங்களில் பாதுகாப்பாக வேலை செய்தல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.

அதில் கிட்டத்தட்ட 7,000 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. தவறிழைத்த நிறுவனங்களுக்கு $1.5 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டதோடு, 28 வேலை நிறுத்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

அந்த நடவடிக்கைகள், நிறுவனங்கள் தங்கள் பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், அதன்மூலம் தொழிலாளர்களின் பாதுகாப்பு, நலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தின.

புகாரளிக்கப்படாத சம்பவங்களை முடிந்த அளவில் கண்காணித்து வர முயன்றாலும் அவற்றை முழுவதும் கண்டறிவது கடினம் என்று அமைப்பு தெரிவித்தது.

விபத்து நேர்ந்தால் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்று சட்டம் கூறினாலும் புகாரளிக்கும் கடமையும் பொறுப்பும் இருக்க வேண்டும் என்று அமைச்சு வலியுறுத்தியது.

இதனிடையே, அண்மை மருத்துவச் சான்றுகள், உலகளாவிய நடைமுறைகளின் அடிப்படையில் தொழில்சார் நோய்களின் பட்டியலை அமைச்சு சீரமைக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்