ஈசூனில் வீடு தீப்பற்றி 17 வயது இளையர் உயிரிழப்பு

1 mins read
726b6fce-f6e0-41fe-ad77-ffc7cd4546c4
ஈசூன் ரிங் ரோடு, புளோக் 783ன் 12ஆம் தளத்திலிருக்கும் ஒரு வீட்டில் தீப்பற்றியது. படம்: சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை -
multi-img1 of 2

ஈசூன் வட்டாரத்தில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீப்பிடித்ததில் 17 வயது இளையர் ஒருவர் மாண்டுபோனார். இத்துயர நிகழ்வு நேற்று சனிக்கிழமை (ஜூன் 10) நிகழ்ந்தது.

தன்னுணர்வற்ற நிலையில் அவ்விளையர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தீக்காயங்களால் அங்கு அவரது உயிர்பிரிந்ததாகவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஈசூன் ரிங் ரோடு, புளோக் 783ன் 12ஆம் தளத்திலிருக்கும் அவ்வீட்டைப் புகை சூழ்ந்திருந்த நிலையில், அங்கு தன்னுணர்வற்ற நிலையில் அவ்விளையரைக் கண்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

தீயணைப்பாளர்கள் அவரைத் தரைத்தளத்திற்குத் தூக்கிக்கொண்டு வந்தனர். குடிமைத் தற்காப்புப் படையின் அவசரகால மருத்துவ சேவைப் பிரிவினர் அவருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை அளிக்க, பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

சனிக்கிழமை இரவு 8.55 மணியளவில் தீச்சம்பவம் குறித்துத் தனக்குத் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அவ்வீட்டினுள் தீ கொழுந்துவிட்டு எரிந்தபோதும் தீயணைப்பாளர்கள் துணிந்து அதனுள் சென்றனர்.

அவ்வீட்டின் படுக்கையறையில் தீப்பிடித்ததாகக் கூறப்பட்டது. தீயணைப்பாளர்கள் நீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை வீடுகளில் இருந்த கிட்டத்தட்ட 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து தொடர்பில் காவல்துறை விசாரித்து வருகிறது.