சக பயணிகளிடம் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிய 17 வயது இளையர் கைது

சக பயணிகளிடம் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிய 17 வயது இளையர் கைது

1 mins read
cc1353bf-f5f6-435c-81cd-db7a38396604
பொய்யான தகவல்களைக் கூறி தேவையற்ற பீதியை ஏற்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் எச்சரித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சக பயணிகளிடம் வெடிகுண்டும் மின்சிகரெட்டுகளும் இருப்பதாக இம்மாதம் 14ஆம் தேதி பொய் சொன்ன இளையரைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் உள்ள வருகைப் பேருந்து முனையத்தில் சோதனையை முடித்த அந்த 17 வயது சிங்கப்பூர் இளையர், தமது நண்பர்களைச் சுட்டிக்காட்டி அவர்களிடம் வெடிகுண்டும் மின்சிகரெட்டுகளும் இருப்பதாகக் கூறியதாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.

சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் இளையர் சொன்னதைக் கேட்டதை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் இளையரையும் அவரது இரண்டு நண்பர்களையும் தடுத்து நிறுத்தினார்.

பின்னர் அந்த அதிகாரி அவர்களிடம் கூடுதல் விசாரணை நடத்தியதுடன் சோதனையில் அவர்களிடம் அத்தகைய பொருள்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

இரவு கிட்டத்தட்ட 10.45 மணியளவில் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த இளையர், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காகப் பின்னர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது சட்டவிரோதப் பொருள்கள் தொடர்பாக வரும் அனைத்துப் புகார்களும் தீவிரமாகக் கருதப்படும் என்றும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் வலியுறுத்தியது.

“பொய்யான அல்லது தவறான தகவல்களைக் கூறி பொதுமக்களுக்குத் தேவையற்ற பீதியை ஏற்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்,” என்றும் அது குறிப்பிட்டது.

சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்தும்போது பயணிகள் விதிகளைக் கடைப்பிடிக்குமாறும் அமைதியான முறையில் நடந்துகொள்ளுமாறும் ஆணையம் நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்
குடிநுழைவுசோதனைச் சாவடிவெடிகுண்டுபொய்ச் செய்திஇளையர்கைது