பாலியல் வன்கொடுமை முயற்சி: ஆடவருக்கு 17 ஆண்டுச் சிறை, பிரம்படி

1 mins read
025a3bfc-b180-4d27-bbb3-2b3a60561836
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதிகம் தண்ணீர் அருந்தும்படி மருத்துவர் பரிந்துரைத்ததை அறிந்துகொண்ட ஆடவர், அவருக்கு எப்போதும் மாலையில் ஒரு குவளை குடிநீர் தருவது வழக்கம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசியப் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆடவர் ஒருவரும் அவரின் தோழியும் ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தனர். இருவருக்கும் வயது 26.

ஆடவர் இருமுறை தன் தோழிக்கு குடிநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாகக் கூறப்பட்டது.

அதன் தொடர்பில் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஆடவர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு 17 ஆண்டு சிறைத்தண்டனையும் 14 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. தண்டனை விதிக்கும்போது மேலும் நான்கு குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, ஆடவரின் பெயரை வெளியிட அனுமதி இல்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதிகம் தண்ணீர் அருந்தும்படி மருத்துவர் பரிந்துரைத்ததை அறிந்துகொண்ட ஆடவர், அவருக்கு எப்போதும் மாலையில் ஒரு குவளை குடிநீர் தருவது வழக்கம்.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தண்ணீரில் மயக்க மருந்து கலந்து தந்த ஆடவர் 2020ஆம் ஆண்டு ஜனவரியிலும் மார்ச் மாதத்திலும் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாகக் கூறப்பட்டது.

இரண்டாவது சம்பவத்தில் குடிநீரை அருந்தியதுபோல் நடித்ததால் மாது அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார்.

நெருங்கிய நண்பரே தவறாக நடந்துகொண்டதால் அதிர்ச்சி அடைந்த மாது காவல்துறையிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து ஆடவர் கைது செய்யப்பட்டார்.