சாலை விபத்து ஒன்றில் கழுத்தில் காயம் அடைந்த மாது எஸ்எம்ஆர்டி பேருந்து நிறுவனம் மீது $5 மில்லியன் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை ஆணையர் அலெக்ஸ் வோங் லி கோக், அவருக்கு ஏற்பட்ட கழுத்துக் காயம் விபத்தினால் அல்ல எனத் தீர்ப்பளித்து மாதுக்கு $17,373 இழப்பீடாக வழங்கினார்.
இதன் தொடர்பில் திங்கட்கிழமை (ஜனவரி 20) தீர்ப்பு வழங்கிய நீதித்துறை ஆணையர் அலெக்ஸ் வோங், திருவாட்டி லீ சிம் லெங் என்ற மாதின் கழுத்துப் பகுதியில் உள்ள நடுத்தண்டு ‘சர்வைக்கல் ஸ்போன்டிலோசிஸ்’ என்ற வயது மூப்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி அது விபத்தால் ஏற்பட்டதல்ல எனத் தீர்ப்பளித்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி நிகழ்ந்த அந்த விபத்தில் அவருடைய கழுத்து திடீரென முன்பின் அசைந்ததால் மாதுக்கு கழுத்துக் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு காயம் ஏற்பட்டபோதிலும் விபத்துக்குப் பின் அவருக்கு அவசர மருத்துவ வாகன உதவி தேவைப்படவில்லை என்று கூறப்பட்டது.
விபத்து காரணமாகவே தமக்கு கழுத்துக் காயம் ஏற்பட்டதாக திருவாட்டி லீ உண்மையாகவே நம்பினாலும் அவரின் கழுத்துக் காயம் விபத்தினால் ஏற்பட்டதல்ல என்றும் அவருக்கு ‘சர்வைக்கல் ஸ்போன்டிலோசிஸ்’ ஏற்கெனவே இருந்துள்ளது என நீதித்துறை ஆணையர் தமது தீர்ப்பில் கூறினார்.